என்றபொதுப்பெயர், சந்தர்ப்பத்தினால் கிரௌஞ்சமும் மேருவுமாகிய சிறப்புப்பொருளைக் குறித்தது. குன்றெறிந்த கதை:-சூரபதுமன் முதலியகொடிய அசுரர்களை அழித்தருளவேண்டுமென்று பிரார்த்தித்த தேவர்களது வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபிரானால் உண்டாக்கப்பட்ட இளையகுமாரனான முருகக்கடவுள் அவ்வசுரர்களையழித்தற்பொருட்டுப் படையெடுத்துத் தேவர்களுடனே சூரபதுமனது மகேந்திர நகரத்தை நோக்கிச் செல்லும் வழியிடையே வானுறவோங்கிய கிரௌஞ்சகிரியைக் கண்டு தேவர்கள் திகைத்திடுதலும், நாரதமுனிவன் கூறியதனால் அம்மலையில் ஒருசார் மாயாபுரியிலே சூரபதுமனது தம்பியான தாரகன் பல அசுரசேனையுடனே யிருத்தலையறிந்து, முருகக்கடவுள் தனக்குத் தம்பிமுறையாகின்ற வீரவாகுவைச் சேனையோடு போர்க்கு அனுப்ப, தாரகாசுரனும் சேனையுடன்வந்து போர்செய்கையில், அசுரர்கள் அழிந்திட, யானைமுகமுள்ள அத்தாரகாசுரன் கடும்போர்புரிந்து சுப்பிரமணிய பரிவாரமான பூதகணங்களை யழித்து முடிவில் முன் நிற்கமாட்டாமல் அந்நிலையில் ஒரு குகையிலே ஒளித்தனனாக, தொடர்ந்துசென்ற வீரவாகு முதலியோர் பலர் அக்குகையினுள்ளே அம்மலையின் மாயையால் மயங்கிக்கிடக்க, தாரகன் போர்க்களம் புகுந்து பூதகணங்களை வருத்தித் துரத்த, இச்செய்திகளை நாரத முனிவன் சொல்லக்கேட்டு முருகவேள் சேனையுடன்சென்று போர் செய்து அவ்வசுரனது துதிக்கையையும் தந்தங்களையும் துணித்து அவனதுசேனைகளையழிக்கையில், அவன் அக்கிரௌஞ்சமலையுடன் கூடிப் பல மாயைகள்புரிய, ஆறுமுகமூர்த்தி வேலாயுதத்தை யெறிந்து அம்மலையையும் அவ்வசுரனையும் அழித்து, மயங்கிக்கிடந்த தனது வீரர்களையெல்லாம் தனது திவ்விய சக்தியால் எழுப்பி யழைத்துக்கொண்டு அப்பாற்சென்றன னென்பதாம். அன்றியும், சிவபிரான் பரசுராமனுக்கும் சுப்பிரமணியனுக்கும் ஒருங்கு படைக்கலவித்தை பயிற்றுவித்தபின்பு அவர்கள் திறத்தைப் பரீக்ஷிக்கையில், பரசுராமன் அம்பெய்து கிரௌஞ்சகிரியைத் துளைக்க, குமாரமூர்த்தி தனது வேற்படையை அக்கிரியின்மீது எறிந்து அதனைப் பிளந்து தனது வேலின் திறத்தைக் காட்டின னென்ற வரலாறும் உண்டு. சிவபிரான் மகாமேருமலையை வில்லாகக்கொண்டது, திரிபுரசங்கார காலத்தில்;அவ்வரலாறு வருமாறு:- தாரகாசுரனது புத்திரர்களாகிய வித்யுந்மாலி தாரகாட்சன் கமலாட்சன் என்னும் மூவரும் மிக்க தவஞ்செய்து மயனென்பவனால் சுவர்க்க மத்திய பாதாளமென்றமூன்றிடங்களிலும் முறையே பசும்பொன் வெண்பொன்கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந்தன்மையுடைய மூன்றுபட்டணங்களைப் பெற்று, மற்றும் பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த இடங்களிற் பறந்துசென்று பல இடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டு |