கோளினால்,சிவபெருமான், பூமியைத் தேராகவும், சந்திர சூரியரைத் தேர்ச்சக்கரங்களாகவும், நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைந்த அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும், மற்றைத்தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு யுத்தசன்னத்தனாய்ச் சென்று போர்செய்ய யத்தனித்துப் புன்சிரிப்புச்செய்து திருமாலாகிய அம்பையெய்து அவ்வசுரரனைவரையும் பட்டணங்களோடு எரித்தருளின னென்பதாம். 'குன்றவில்லி' என்ற பெயரினால், கல்லை வில்லாகவளைத்து அதுகொண்டு தொழில் செய்ய வல்லவ னெனச் சிவபிரானது மிக்கதிறமை விளங்கும். (290) 132.-அரண்மனையிற் புகுந்தஉத்தரன் கங்கபட்டனது நெற்றியில் வடுவைக் காணுதல். தழுவியவரசன்றாளிற்றலையுறவீழ்ந்துவேந்தர் குழுவிடைக்கொண்டுபோகக்கோயிலிற்புகுந்தபின்னர்ப் பழுதறுவாய்மைவேதபண்டிதன்பாதம்போற்றிச் செழுமலர்வதனநோக்கித்திருநுதல்வடுவுங்கண்டான். |
(இ-ள்.) (உத்தரகுமாரன்),- தழுவிய அரசன் தாளில் - (தன்னை) அணைத்துக்கொண்ட விராடராசனது பாதங்களில், தலை உற - (தனது) தலை படும்படி, வீழ்ந்து - விழுந்து (ஸாஷ்டாங்கமாக) வணங்கி,- வேந்தர் குழு இடை கொண்டு போக - அரசர் கூட்டம் (சுற்றிலும்சூழ்ந்து) இடையிலே (தன்னை) அழைத்துக் கொண்டுபோக, கோயிலில் புகுந்த பின்னர் - அரண்மனையிற் சேர்ந்தபின்பு,- பழுது அறு வாய்மை - குற்றமற்ற உண்மைமொழிகளையுடைய, வேத பண்டிதன் - வேதம்வல்லவனாகிய கங்கபட்டனது, பாதம் - சீர்பாதங் களை, போற்றி - வணங்கி,- செழு மலர் வதனம் நோக்கி - செழுமையான செந்தாமரைமலர்போன்ற (அவனது) திருமுகத்தைப் பார்த்து, திரு நுதல் வடுவுஉம் கண்டான் - (அம்முகத்திலே) அழகிய நெற்றியில் ஊறுபட்டிருத்தலையும் பார்த்தான்; (எ - று.) தருமபுத்திரன் சத்தியவிரதனாதலால், அவனுக்கு 'பழுதறுவாய்மை' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. அந்தணவடிவங்கொண்டவ னாதலால், தருமன் 'வேதபண்டிதன்' எனப்பட்டான். 'பூவிற்குத் தாமரையே' என்றபடி எல்லா மலர்களினும் தாமரை மலர் மிகச்சிறத்தல்பற்றி, 'செழுமலர்' எனப்பட்டது. ஊறுபட்டிருக்கையிலும் முகச்சுளிப்புறாத பொறையுடைமை, 'செழுமலர் வதனம்' என்றதனால் விளங்கும். (291) 133.-நிகழ்ந்த செய்தியையறிந்து உத்தரன் உளம்வருந்துதல். திகழ்ந்தநின்னுதலினூறுசெய்தவர்யார்கொலென்ன நிகழ்ந்தமைதந்தைகூறநெஞ்சினாற்றந்தைதன்னை |
|