(இ -ள்.) சுந்தர கிரிகள் போலும் தோளினான் - அழகிய மலைகள் போன்ற தோள்களையுடையவனான உத்தரன்,- அங்கு - அப்பொழுது, தந்தைஉம் தான்உம் தனித்து இருந்து - விராடனும் தானுமாகத் தனியிடத்தெயிருக்கையில், அடையலாரை - பகைவர்களை, முந்திய அமரில் சென்று - முற்பட்ட யுத்தகளத்திற் போய், முனைந்து - எதிர்த்து, போர் விளைத்த ஆறுஉம் - யுத்தஞ்செய்த விதத்தையும், வந்தவர் சாய்ந்த ஆறுஉம் - எதிர்த்துவந்த அரசர்கள் தோற்றுப்போன விதத்தையும், மணி நிரை மீட்ட ஆறுஉம் - அழகிய பசுக்கூட்டத்தை மீட்டுவந்தவிதத்தையும், தோன்ற சொல்வான் - விளங்கச்சொல்பவனானான்; (எ - று.) - இதன் விவரத்தை, அடுத்த கவியிலுங் காண்க. தமதுஅரண்மனையிற் பாண்டவர் இரகசியமாக அஜ்ஞாதவாசஞ் செய்திருந்தமையையும், அவர்களில் அருச்சுனனே இப்போர்வென்றன னென்பதையும் கூறுகின்றா னாதலின், தனித்திருந்து கூறுபவனானான். மணி நிரை - மணிகள்கட்டிய பசுக்களுமாம். 'சாய்ந்த ஆறு' என்றதில்; மோகநாஸ்திரத்தாற் கீழேவிழுந்து கிடந்ததும் அடங்கும். கீழ் 101-ஆஞ் செய்யுளில் "முடியடி படிக்கண் வீழ்த்தான்' என்றமை காண்க. இருந்து = இருக்க: எச்சத்திரிபு. (296) வேறு. 138.-மூன்றுகவிகள் -ஒருதொடர்: உத்தரன் விராடனிடத்துக் கூறியதைத் தெரிவிக்கும். உருப்பசிவெஞ் சாபத்தாற் பேடியான வுருவமொழித் தருச்சுனன்றனுருவங் கொண்டு, பொருப்பனைய கவித்துவசத் தேர்மேல் வண்ணப் பொருசிலைதன் கரத்தேந்திப் புகுந்தபோது, செருப்புரவி யிரவியெதிர் திமிரம் போலத் திறலரியேற் றெதிர்கரியின் றிறங்கள் போல, நெருப்பெதிர்ந்தபதங்கம்போ லழிந்தா ரைய நிரைபோக்கி யணியாகி நின்ற வேந்தர். |
(இ -ள்.) ஐய - தந்தையே! (பிருகந்நளை), உருப்பசி வெம் சாபத்தால் பேடி ஆன உருவம் ஒழித்து - ஊர்வசியிட்ட கொடிய சாபத்தாற் பேடியாய்க்கிடந்த செயற்கைவடிவத்தைப் போக்கி, அருச்சுனன் தன் உருவம் கொண்டு - அருச்சுனனாகிய தனது இயற்கைவடிவத்தையடைந்து, பொருப்பு அனைய கவி துவசம் தேர்மேல் - மலைபோன்றதும் குரங்குக்கொடியுடையதுமான (தனக்குரிய) தேரின்மேலேறி, வண்ணம் பொரு சிலை தன் கரத்து ஏந்தி - அழகிய போர்க்கு உரிய தனது காண்டீவவில்லைத் தன்கையிலெடுத்துக்கொண்டு, புகுந்தபோது - (போர்க்களத்திற்) புகுந்தபொழுது, அணி ஆகி நின்ற வேந்தர் - படைவகுத்து வந்துநின்ற பகையரசர்கள், செரு புரவி இரவி எதிர் திமிரம் போல - போர்செய்யவல்ல குதிரைபூண்ட (தேரையுடைய) சூரியனை எதிரிற்கண்ட இருள்போலவும், திறல் அரி ஏறு எதிர் கரியின் திறங்கள் போல - வலிமையுடைய ஆண்சிங்கத்தை |