பொருந்தும்படி, அருகு - (அந்தத் தருமனுடைய) சமீபத்திலே, சூழ்தர - சுற்றிலும், இருந்தார்-; (எ - று.) (303) 4.-அருச்சுனன்'உன்நெற்றியிற்காணும் வடுஎன்?' என்று தருமனை வினாவ, திரௌபதி நிகழ்ந்ததை யுரைத்தல். தன்னைநிகர்கிற்பவரிலாததனுவல்லோன் என்னைதிருநெற்றியிலிருந்தவடுவென்றான் மின்னையும்வெறுத்தொளிருமேதகுநிறத்தாள் பின்னையவனுக்குநிகழ்பெற்றியுரைசெய்தாள். |
(இ -ள்.) தன்னை நிகர்கிற்பவர் இலாத தனு வல்லோன் - தன்னை யொப்பவரைப்பெறாதவாறு வில்வித்தையில் தேர்ச்சிபெற்றவனான அருச்சுனன், (தருமனைநோக்கி), 'திரு நெற்றியில் இருந்த வடு என்னை என்றான்- (உனது) அழகியநெற்றியிலே காணப்படும் தழும்பு எவ்வாறு வந்தது?' என்று வினவினான்; மின்னைஉம் வெறுத்து ஒளிரும் மேதகு நிறத்தாள் - மின்னலையும் (தனக்கு ஒப்பாகாது என்று) வெறுத்துத்தள்ளி [மின்னலினும் விளக்கம் பொருந்தி] விளங்குகின்ற மேம்பட்ட நிறத்தையுடையவளான திரௌபதி, பின்னை-பின்பு, அவனுக்கு - அந்த அருச்சுனனிடம், நிகழ் பெற்றி - நடந்த நிகழ்ச்சியை, உரைசெய்தாள் - சொன்னாள்; (எ - று.) விராடனும் கங்கப்பட்டனென்ற தருமனுஞ் சூதாடுகையில் இருவர்க்கும் நடந்த பேச்சில் விராடன் வெகுண்டு கவறுகொண்டு மோதியது முதலியன நிகழ்ந்ததைக் கீழ் நிரைமீட்சிச்சருக்கத்தில் 120-ஆம் பாடல்முதல் காணலாம். (304) 5.-அருச்சுனனும் வீமனும்விராடன்மீது வெகுளி கொள்ளுதல். உரைத்தபொழுதிப்பொழுதிவ்வூரெரிகொளுத்தித் தரைத்தலைவனைத்தலைதடிந்திடுவலென்னா விரைத்தடவரைப்புயன்வெகுண்டுவிலெடுத்தான் இரைத்துவருகான்மகனுமெரிவிழிசிவந்தான். |
(இ -ள்.) உரைத்த பொழுது - (நடந்த நிகழ்ச்சியைத் திரௌபதி) சொன்னபோது, தடவரை புயன் - பெரிய மலைபோலுந்தோள்களை யுடையவனான அருச்சுனன், விரை - விரைவுகொண்டு, வெகுண்டு - சினந்து, 'இ பொழுது - இப்போதே, இ ஊர் - இந்தவூரை, எரி கொளுத்தி - நெருப்பினாலெரித்திட்டு, தரை தலைவனை - மச்சதேசாதிபதியாகிய விராடனை, தலை தடிந்திடுவல் - தலைதுணித்துவிடுவேன்,' என்னா - என்றுசொல்லி,- (அங்ஙனே செய்யுமாறு), வில் - விற்படையை, எடுத்தான் - கையிலெடுத்துக் கொண்டான்; இரைத்து வரு - ஒலிசெய்துகொண்டு வீசுந்தன்மையுள்ள, கால் - வாயுதேவனுடைய, மகன்உம் - புத்திரனான வீமசேனனும், எரி விழி - நெருப்புப் பொறிபறக்கப்பெற்ற கண்கள், சிவந்தான் - சிவக்கப்பெற்றான்; |