இதுமுதற் பத்துக்கவிகள் - பெரும்பாலும் முதல்மூன்றுசீர்கள் விளங்காய்ச்சீர்களும் ஈற்றுச்சீரொன்று மாச்சீருமாகிவந்த அளவடினான்கு கொண்ட கலிவிருத்தங்கள். (29) 30.-வண்ணமகள் வந்திருத்தலைவாயில்காவலர் தெரிவிக்க, விராடன்மனைவி உள்ளேயழைக்குமாறு கூறுதல். மதுமலரின்வாழ்திருவும்வந்துதொழவுரியாள் நொதுமலினளாகியொருநுண்ணிடைநடந்தாள் பதுமவிழியாயெனலும்வாயிலவர்பால்போல் மதுரமொழியாளழைமின்வாணுதலையென்றாள். |
(இ -ள்.) வாயிலவர் - வாயிலிலேயிருந்து பாதுகாவல் புரிபவர், சுதேஷ் ணையைக்கிட்டி அவளைநோக்கி),-'பதுமம் விழியாய்-தாமரை மலர்போன்ற கண்களையுடையவளே! மது மலரின் வாழ் திருஉம் வந்து தொழ உரியாள்- தேனைக்கொண்ட தாமரைமலரில் வாழ்பவளாகிய இலக்குமியும் வந்துதொழுதற்குஉரிய கட்டழகுடையவளான, ஒரு நுண் இடை-நுண்ணிய இடையையுடையாளொருத்தி, நொதுமலினள் ஆகி-சாதாரண மானுடப்பெண்போன்று, நடந்தாள் - வந்துள்ளாள், எனலும்-என்று தெரிவித்தவுடனே,-பால்போல் மதுரம் மொழியாள் - பால்போல்இனிய பேச்சையுடையவளான அந்த விராடன் மனைவி, (அங்ஙனம் சொன்ன வாயில்காவலரை நோக்கி),-வாள்நுதலை-ஒளியுள்ள நெற்றியையுடையவளான அந்தப்பெண்ணை, அழைமின்-(உள்ளே) அழைத்துவாருங்கள்,' என்றாள் - என்று கூறினாள்; (எ - று.) வந்தவளின் கட்டழகைக் காணும்போது பெருஞ்சிறப்பினளாயிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றதாயினும், சாதாரணமான வறுமையுள்ள பணிப்பெண்கோலத்தைப் பூண்டுள்ளா ளென்பார், மதுமலரின்வாழ்திருவும் வந்து தொழவுரியாள் நொதுமலினளாகிநடந்தாள்' என்றார். நுண்ணிடை - பண்புத்தொகையன்மொழி. வாணுதல்-அடையடுத்த சினையாகுபெயர். (30) 31.-அரசன்மனைவி,வந்தவளையுபசரித்துப் பின்வினாவுதல். வந்தவளிருந்தவண்மருங்கணையும்வேலை யந்தணுபசாரமுடனருகுறவிருத்திச் சந்தொடகில்பூவிலைகடகவுடன்வழங்கி யெந்தநகரீருரைமின்யாமுணரவென்றாள். |
(இ -ள்.)வந்தவள்-(வண்ணமகளின் வடிவுகொண்டு) வந்தவளான அவள், இருந்தவள் மருங்கு-அரண்மனையிலேயிருந்த அரசமனைவியின் பக்கத்தில், அணையும் வேலை-வந்துசேர்ந்தபோது, (அரசன்தேவி),-அந் தண் உபசாரமுடன்-அழகிய குளிர்ந்த உபசாரத்துடனே, அருகுஉற இருத்தி-(தன்) சமீபத்திலே தங்கியிருக்குமாறு இருப்பிடந்தந்து,-சந்தொடு - சந்தனமும், அகில் - அகில்தூபமும், பூ-புஷ்பமும், இலைகள் - வெற்றிலைகளும், தகவுடன் - சிறப்பாக, |