வன்னிப்பொதும்பர்வயின்வைத்தவயங்குசோதி மின்னிற்றிகழ்வெம்படையாவையுமீண்டுகொண்டார். |
(இ -ள்.) முன்னி - ஆலோசித்து, சமருக்கு ஒருப்பட்ட - (எந்த வகை யிலும் சந்திக்கு இணங்காவிட்டால்) போர்செய்யுமாறு சம்மதித்த, முடி - கிரீடங் களையணிந்த, மகீபர் - அரசர் [பாண்டவர்],- கன்னிக்கு - காளிகாதேவிக்கு, வேண்டும் - இன்றியமையாத, கடன் ஆன - முறைமையான, பலிகள் - உயிர்ப்பலிகளை, நல்கி - கொடுத்து,- வன்னி பொதும்பர்வயின் - வன்னிமரத்தின் பொந்திலே, வைத்த - (அஜ்ஞாதவாசஞ்செய்வதற்கு முன்னே) வைக்கப்பட்ட, வயங்கு சோதி மின்னின - விளங்குகின்ற ஒளியையுடைய மின்னலைப்போல, திகழ் - விளங்குகின்ற, வெம் படை யாவைஉம் - (தம்முடையவான) கொடிய ஆயுதங்களையெல்லாம், மீண்டு - மறுபடியும், கொண்டார் - எடுத்துக்கொண்டார்கள்; (எ - று.) நாடுகரந்துறைசருக்கத்து 9, 10 - பாடல்களால், காளிகோயிலை யடுத்த வன்னிமரத்தின்பொதும்பரில் பாண்டவர் தம்படைக்கலங்களைச் சேமித்து வைத்தமை விளங்கும். (329) 30.-அபிமந்யுவின் விவாகம்முடிந்தபின் க்ருஷ்ணனும் பாண்டவரும் மற்றையாவரும் உபலாவியத்திற்புகுந்து போர்க்குவேண்டுவன ஆராய்தல். சேயோன்விழவுவிழைவோடுசிறந்தபின்னர் மாயோனுமற்றக்குருமைந்தருமன்னர்யாரும் போயோதைவீதியுபலாவிபுகுந்துதங்கள் ஆயோதனத்துக்குறுநீர்மைகளாயலுற்றார். |
(இ -ள்.) சேயோன்-(அபிமந்யுஎன்ற) குமாரனுடைய, விழவு-கலியாணம், விழைவோடு - (யாவரும்) விரும்பும்வண்ணம், சிறந்த பின்னர் - சிறக்க நடந்த பிறகு,- மாயோன்உம் - ஸ்ரீக்ருஷ்ணனும், அ குரு மைந்தர்உம் - அந்தக் குருகுல குமாரரான பாண்டவர்களும், மன்னர் யார்உம் - (பின்னும் தமராகவும் நண்பராகவுமுள்ள) அரசர்யாவரும், போய் - (அவ்விராடநகரத்தை) விட்டுச்சென்று, ஓதை வீதி - பலவகை யோசைகளையுடைய வீதியைக் கொண்ட, உபலாவி புகுந்து - உபப்லாவியத்திற்புகுந்து, தங்கள் ஆயோதனத்துக்கு - தாம்செய்யக் கருதய பெரும்போர்க்கு, உறும் - வேண்டிய, நீர்மைகள் - தன்மைகளைக் குறித்து, ஆயல் உற்றார் - ஆராய்தற்குப் பொருந்தினார்கள்; (எ - று.) சேயோன் - முருகக்கடவுள்: இச்சொல் - குமரன்என்பதுபோல, மைந்தனென்ற பொருளைக் காட்டிற்று. உபலாவி - உபப்லாவ்யம் என்றவடசொல்லின்திரிபு: இது, விராடநகரத்துக்கு மிக அருகிலுள்ளதாகும். மற்று - அசை. மாயாக்குருமைந்தரும்என்றும், போயோகையோடும் என்றும் பிரதிபேதம். (330) வெளிப்பாட்டுச் சருக்கம்முற்றிற்று. ------ விராடபருவம் முற்றுப்பெற்றது. |