இரண்டாவது ம ற் போ ர் ச் ச ரு க் கம். மற்போரைப்பற்றிய சருக்கமென்று விரியும். வேற்றுநாட்டினின்று வந்து 'மற்போரில் என்னினும் மிக்கார் இல்லை' என்று தருக்கிய மகாமல்லனுடன் வீமன் மற்போர்புரிந்து வென்றதைக் கூறுவது, இந்தச்சருக்கம். 1.-மல்லனொருவன், மற்போரில்ஒப்பற்றவன் என்று சொல்லிக்கொண்டுஅந்தவிராடநகர்க்கு வருதல். அல்லினுக் கிந்து வென்னவாங்கவ ருறையு நாளில் வில்லினுக் கிராம னென்னவேலினுக் கிளையோ னென்னச் சொல்லினுக் குததிதோய்கைத் தொன்முனி யென்ன வன்போர் மல்லினுக் கொருவன் யானேவாசவ னென்று வந்தான். |
(இ -ள்.) அல்லினுக்கு - இராப்போதில், இந்து என்ன - சந்திரன் சிறப் புற்றிருப்பதுபோல, (மிக்கசிறப்புற), ஆங்கு - அந்தவிராடநகரிலே, அவர் - அந்தப்பாண்டவர், உறையும் - வசித்துவருகின்ற, நாளில் - காலத்தில்,- 'வில்லினுக்கு இராமன் என்ன - வில்வித்தையில் ஸ்ரீராமன்போலவும், வேலினுக்கு - வேற்படையில், இளையோன் என்ன - (சிவபிரானுடைய) இளையகுமாரனாகிய முருகக் கடவுள்போலவும், சொல்லினுக்கு - தமிழ்மொழிக்கு, உததி தோய்கை - சமுத்திரம்படிந்த கைகளையுடைய, தொல் முனி என்ன - பழமையான அகத்தியமுனிவன்போலவும், வல் மல் போரி னுக்கு - உடல்வலிமை கொண்டுசெய்யப்படுகிற மல்லயுத்தத்திற்கு, வாசவன் - வாசவனாக, யான்ஏ - யானே, ஒருவன் - ஒப்பற்றவன்,' என்று - என்று சொல்லிக்கொண்டு, (ஒருமல்லவீரன்), வந்தான் - (அந்த விராடநகரில்) வந்துசேர்ந்தான்; (எ - று.) சொல் - பாஷா என்றவடசொல்லின் மொழிபெயர்ப்பு. உததி தோய்கைத் தொன்முனி யென்று வருவதனால், சொல் - தமிழ்ச் சொல்லைக் காட்டிற்று. சூரபத்மாஎன்ற அசுரன் கடலிற் புகுந்து கொண்டானாக, அப்போது அகத்தியமுனிவன் தேவர்களின் வேண்டுகோளினால் கடனீரைத் தன்கைச் சுளகத்தி லடக்கி, ஆசமனஞ் செய்தானென்ற வரலாறுபற்றி, 'உததிதோய்கைத் தொன்முனி' என்றது. முதனூலில், வந்தமல்லன்பெயர் ஜீமுத னென்று இருப்பதனாலும், மல்லேந்திரனென்று அன்னான் கூறப்படுவதனாலும், வாசவன் என்பதைப் பேராகக் கொள்ளாமல், 'மல்லினுக்கு வாசவன் யான் ஒருவனே' என்று கூட்டியுரைக்கப்பட்டது. பாண்டவர் வந்து நான்குமாதம் கழிந்ததும், விராடநகரத்தில் சங்கரவுத்ஸவம் வந்ததாக, அப்போது பலமல்லர்களும் ஆங்கு வந்தனர்: அங்ஙனம் வந்தவர்களுள் ஒருவன் என்னில் மிக்காரில்லையென்று தன்னைப் பாராட்டிக்கூறிக்கொண்டு வந்தா னென்ற விவரத்தை முதனூலா லறிக. |