பக்கம் எண் :

மற்போர்ச் சருக்கம் 29

திண்தேர்மிசை வரும் பரிதி போல-பாய்ந்துசெல்லும் இயல்புள்ள பெரிய
குதிரைகள் பூட்டிய வலிய தேர்மீதுவரும் சூரியன்போல், (பாயிரும் புரவித்
திண்தேர்மிசை வந்து),-மா இரு ஞாலந்தன்னில் இவற்கு எதிர் இன்று என்ன-
மிகப்பெரியபூமியிலே இந்தமல்லற்கு ஒப்பானவர் இல்லையென்று (கண்டவர்)
சொல்லுமாறு, சேய் இரு தட கை வேந்தன்-செவ்விய பெரிய நீண்ட
கைகளையுடைய விராடராசனது, திருந்து அவை அதனை - திருத்தமுற்ற
சபையை, சேர்ந்தான்-வந்தடைந்தான்;(எ - று.)

     சூரியனுக்கு ஒப்பான கிரகம் எங்ஙனம் வானத்திலில்லையோ அவ்வாறே
இந்தமல்லனுக்கு ஒப்பானவர் இப்பூவுலகிலில்லை யென்று சொல்லுமாறு மிக்க
 ஆடம்பரஞ்செய்துகொண்டு நிழல்போல ஆயிரமல்லர் தன்னைச் சூழ்ந்துநிற்க,
விராடனுடைய அவைக்களத்தை அந்தமல்லன் வந்துசேர்ந்தானென்க.
கற்றோர்பலர் சேர்ந்திருத்தலால், விராடனுடைய சபை,
திருந்தவையெனப்பட்டது.  வந்தமல்லன் தேர்மீதூர்ந்துவந்தா னென்று மேல்
ஏழாம்பாட்டிற் பெறப்படுவதனால், அவனுக்குத் திண்தேர்மிசை வரும் பரிதியை
உவமை கூறினார்.                                           (41)

4.-வந்தவன் 'மற்போருக்குஎன்னைப்போன்றவரில்லை'
என்ன, விராடன் அவனுக்குச்சிறப்புச்செய்து தன்னிடமுள்ள
மல்லரை நோக்குதல்.

மன்னனைவணங்கிநின்றுவலியுடைமல்லின்போருக்கு
என்னலதில்லையிந்தவெழுகடல்வட்டத்தென்றான்
கொன்னவில்வேலினானுங்கொடுப்பனகொடுத்துமுன்னம்
தன்னுழைவைகுமல்லர்தங்களைநோக்கினானே.

      (இ -ள்.) (வந்த மல்லவீரன்), மன்னனை-விராடராசனை, வணங்கி
நின்று -, 'வலிஉடை - தேகபலத்தைக்கொண்டுசெய்கின்ற, மல்லின் போருக்கு-
மற்போரிலே, (மிக்கவர்), இந்த எழு கடல் வட்டத்து-ஏழு கடல்களாற்
சூழப்பட்ட இந்தப் பூமண்டலத்தில், என் அலது - என்னையல்லாமல், இல்லை-
(வேறொருவரும்) இல்லை,' என்றான்-என்று (தன்திறமையைத்) தெரிவித்தான்;
கொல் நவில் வேலினான்உம் - கொல்லுதற்றொழிலிற் பயின்ற
வேற்படையையுடைய விராடராசனும், கொடுப்பன - (அவனுக்குக்
கொடுக்கத்தக்க) சிறப்புக்களை, கொடுத்து-, முன்னம்-(அந்த மல்லவீரன்
வருதற்கு) முன்னமே, தன்னுழை வைகும்-தன்னிடத்துத் தங்கியுள்ள, மல்லர்
தங்களை - மல்லர்களை, நோக்கினான்-; (எ - று.)

     தன்னுழைவைகும் மல்லர்களை நோக்கியது - 'என்னினும்மிக்க மல்லர்
இந்தப்பூமண்டலத்தி லில்லை' என்று கூறுவதனால், இவனுடன் மற்போர்
செய்து வெல்லவேண்டு மென்பதைக் குறிப்பிக்கவாகும்.              (42)