(இ -ள்.) இயல் திறல் விராடன் - பொருந்திய திறமையையுடைய விராடராசன்,-மன்னவர்க்கு - அரசர்களுக்கு, அளிக்கத்தக்க - கொடுத்தற்குஉரிய, வரிசைகள் அனைத்துஉம் - சிறப்புக்களையெல்லாம், நல்கி - (அந்த வென்ற பலாயனனென்ற மல்லனுக்குக்) கொடுத்து,-முன்னவன் ஆகி வைகும் முனி மனம் களிக்கும்ஆறு-(தன்)முன்னிடத்தி லிருப்பவனாகித் தங்கியுள்ள கங்கபட்டனென்ற முனிவனுடைய நெஞ்சம் மகிழ்ச்சியடையுமாறு, (அந்தப்பலாயனனை), தன் அருகு அணுக வைத்து - தன்னுடைய சமீபத்திலே சேரவைத்து, 'இந்த இன் அமுது அடுவோற்கு - இனிய சமையலைச் சமைக்கும் இந்தப் பலாயனனுக்கு, எதிர் - ஒப்பானவர், இ தலத்து-இந்தப் பூமியிலே, இல்லை-', என்றான்-என்று (அந்தப் பலாயனன் திறமையைக் கொண்டாடிக்) கூறினான்; (எ - று.)-மன்னவர் களிக்கத்தக்க என்றும், அருகணைய வைத்துத் தலத்து என்றும் பாடம். தான், ஏ-அசைகள். (52) மற்போர்ச்சருக்கம் முற்றிற்று. ----- மூன்றாவது கீசகன்வதைச் சருக்கம். கீசகன்வதையைத் தெரிவிக்குஞ் சருக்க மென்பது பொருள். விரதசாரிணியென்று பேர்பூண்டு, விராடன்தேவியாகிய சுதேஷ்ணையினிடம் வண்ணமகளாயிருந்த பாண்டவரின்தேவியாகிய திரௌபதியைக் கண்டு காமுற்ற கீசகன் இரவிலே வீமனாற் பொருது கொல்லப்பட்ட செய்தியறிந்த உபகீசகர் கீசகனுடலோடு திரௌபதியையும் ஈமவழலிலிடுமாறு பற்றிச்செல்ல, திரௌபதியின் புலம்பலால் அதனையுணர்ந்த வீமன் அவர்களையும் கொன்ற செய்தி இதிற் கூறப்படும். 1.-கீசகன் சுதேஷ்ணையைக்காண வருதல். அன்னநாளினின் மன்னவன் றேவியா மன்ன மென்னடை யாரமுதன்னசொல், சொன்னசாயற்சுதேட்டிணை தன்றிருத்துணைவர் நுற்றொரு நால்வரிற் றோற்றமும், மன்னு மாண்மையுந் தேசுஞ்சிறந்துளான்வரூதினிக்குத் தலைவன்முன் றோன்றிய, கன்னல் வேளனையான்றன்றுணைவியைக் காண வந்தனன் காண்டகு மேனியான். |
(இ - ள்.) அன்ன நாளினில் - அந்தக் காலத்திலே, மன்னவன் தேவி ஆம்-விராடராசனுடைய மனைவியாகிய, அன்னம் மெல் நடை- அன்னப்பறவையினதுபோன்ற மெல்லிய நடையையும், ஆர் அமுது அன்ன சொல்-கிடைத்தற்கு அரிய தேவாமிருதம் போன்ற [இனிய] சொல்லையும், சொன்னம் சாயல்-ஸ்வர்ணம்போன்ற உடலொளியையு |