எதிர்கொண்டு - ஏற்றுக்கொண்டு, இளையவன் நண்ணும் இல்லிடை சென்று - (எனது) தம்பி வசிக்கிற வீட்டினிடத்துப் போய், இந்த நாள் மலர் நறை கொள் மாலையை - இந்தப் புதியமலர்கொண்டு தொடுத்த நறுமணமுள்ள மாலையை, நல்கினை - கொடுத்துவிட்டு, (உடனே), மீளுவாய் - திரும்பிவிடுவாய்: அவன் - அந்த (என் தம்பியான) கீசகன், வண்ணம் மா மகளே - அலங்காரஞ் செய்யுஞ் சிறந்த பணிப்பெண்ணே! நின் உரு - உன் வடிவத்தை, கண்ணின் காணின் உம்-, கன்னம் இன்புஉற - காது மகிழ்ச்சியடைய, கட்டுரை கேட்பின்உம்-(உன்னுடைய) தொடுத்துச் சொல்லும் பேச்சைக் கேட்டாலும், உயிர் நிற்கும்-(அவனுடைய) உயிர் (உடலில்) தரிக்கும்: ஏகி வருக - போய் வருவாயாக: நீவாழி - நீ வாழ்வாயாக, என - என்று சொல்லி, (அந்தத் திரௌபதியை), வாழ்த்தினாள் -; (எ-று.)-மற்று-அசை. கீசகனிடத்துச் சென்று வருவதனால், நின்கற்பு யாதோரிடையூறுமின்றி யிருக்கவேணு மென்ற கருத்தினால், 'நீ வாழி' என்று வாழ்த்தினாள். (69) 18.-திரௌபதி அந்தச் சுதேஷ்ணை கூறியசொல்லைக் கண்டித்த படியே வேறு வழியில்லாமையால் அவள்சொற்படி மலர்மாலையைக் கீசனிடத்துக் கொண்டுபோதல். மொழியலாதமொழியைச்சுதேட்டிணை மொழிந்தபோதுமுதுக் குறைவுள்ளவப், பழியிலாமொழிப்பாவைவெம்பாதகம் பகர்தியென்னை வெறாதொழிபவைநீ, அழிவிலாதபெருங்கிளைக்கல்லல்கூ ரழிவுவந்ததறிந்திலையென்றுதன், விழிகளாரஞ்சொரியக்கொடுத்தபூ வேரிமாலைகொண்டேகினண் மின்னாள். |
(இ-ள்.) சுதேட்டிணை-, மொழி அலாத மொழியை - சொல்லகாத பேச்சாகிய அந்தச் சொல்லை, மொழிந்தபோது-,-முதுக்குறைவு உள்ள - பேரறிவு படைத்த, அ - அந்த, பழி இலாமொழிபாவை - குற்றமில்லாத பேச்சுக்களையுடைய பெண்ணான திரௌபதி, (சுதேட்டிணையை நோக்கி), - 'வெம் பாதகம் பகர்தி - கொடியபாவச் செயலைச் சொல்லுகின்றாய்: பாவை - பிரதிமைபோன்றவளே! (நான் பின்வருமாறு சொல்வது குறித்து), நீ-, என்னை வெறாது ஒழி - என் மீது வெறுப்புக்கொள்ளாமலிருப்பாயாக: அழிவு இலாத-அழிதலில்லாத (நல்வாழ்வு வாழ்கின்ற), பெருங் கிளைக்கு - (உன்னுடைய) பெரிய சுற்றத்துக்கு, அல்லல் கூர் - துன்பம்மிகுதற்குஏதுவான, அழிவு -, வந்தது-வந்ததை, அறிந்திலை-அறிந்தாயில்லை,' என்று - எனச்சொல்லி,-தன் விழிகள்-தனது கண்கள், ஆரம் சொரிய-முத்துப்போன்ற நீரையுகுக்க,-கொடுத்த-(அந்தச்சுதேஷ்ணை) கொடுத்திட்ட, பூ வேரி மாலை- மலர் கொண்டு தொடுத்த மணமுள்ள மாலையை, கொண்டு-எடுத்துக்கொண்டு, மின் அனாள்-மின்னல்போன்ற பேரொளிபடைத்த உடலையுடைய அந்தத்திரௌபதி, ஏகினள்-செல்லலானாள்; (எ-று.) |