(இ -ள்.) அனைவர்உம் - மக்களெல்லாம், துயின்று - உறங்கி, கங்குல்உம் - இரவும், பால் நாள் - பாதிராத்திரியாக, ஆன பின் -, அழுத கண்ணீரோடு இனைவரு - பெருகுகின்ற கண்ணீரோடு வருந்துகின்ற, தையல் - பெண்ணாகிய திரௌபதி, கண்கள் நீர் மல்க - (தன்னிரண்டு) கண்களிலும் நீர் நிரம்பி நிற்க, இறைமகன் - ராஜகுமாரனாகிய வீமசேனனுடைய, மடைப்பளி - சமையல் செய்யுமிடத்தை, எய்தி - போய்ச் சேர்ந்து, 'நினைவரு-எண்ணத்தக்க (பெருத்த), செற்றம் - பகையை, முடித்திட - ஒழித்திடுதற்கு, வல்லார் - வல்லமையுள்ளவர், நீ அலது - நீயல்லாமல், (வேறொருவர்), இல்லை - இலர்: கனைவரு கழலாய் - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்தவனே! இ கங்குல் - இந்தஇரவில், புரிவது - (நீ) செய்யப்போவது, யாது - எது?' என்றாள் - என்றுவினவினாள்; காளைஉம் - இளவெருதுபோன்றவனான வீமனும், கனன்று - மனங்கோபித்து, இவை - இவ்வார்த்தைகளை, சொல்வான் - சொல்பவனானான்; (எ - று.)-வீமன் சொல்வதை, மேலிரண்டு கவிகளிற் காண்க. கீசகனாற் பரிபவம் நேர்ந்ததுமுதல் கண்ணீர்பெருக வருந்திய வண்ணமிருத்தலால், திரௌபதியை, 'அழுத கண்ணீரோடினைவருதையல்' என்று குறித்தார். இக்கங்குலிலே தான் புரியக் கருதியதை ஐம்பதாம்பாடலில் வீமன் விவரிப்பன். புரிவதியாதென்றாள் என்ற இடத்துக் குற்றியலிகரம் அலகு பெறவில்லை. இனைவரு, கனைவரு, வா - துணைவினை. (100) 49.-இரண்டுகவிகள் - ஒருதொடர்: வீமசேனன் கூறுவன தெரிவிக்கும். பொறையெனப்படுவதாடவர்தமக்குப்பூணெனப்புகலினும்பொருந்தார், முறையறப்புரிந்தாலக்கணத்தவர்தம் முடித்தலைதுணிப்பதேமுழுப் பூண், நறைமலர்க்ககுழலார்தமக்குமெய்யகலா நாணமேநலஞ்செய் பூணெனினும், நிறையுடைப்பெரும்பூணமளிவாய்நாண நிகழ்வுறாநிகழ்ச் சியேயன்றோ. |
(இ -ள்.) ஆடவர் தமக்கு-, பொறை எனப்படுவது - பொறுமையென்று சொல்லப்படுவது, பூண் என புகலின்உம் - ஆபரணம்போல் விளக்கந்தருவது என நூல்களிற் கூறப்படினும், பொருந்தார் - பகைவர், முறை அற புரிந்தால் - முறைமைதவறத் தொழில்செய்தால், அ கணத்து - அந்தநொடியில்தானே, அவர்தம் - அப்பகைவருடைய, முடிதலை - கிரீடமணிந்த தலையை, துணிப்பதே-, முழுப்பூண் - பேரணி கலம்போல் விளக்கந்தருவதாம்: 'நறைமலர் குழலார் தமக்கு - நறுமண மலரையணிந்த கூந்தலையுடைய ஸ்திரீகட்கு, மெய் அகலா நாணம்ஏ - அவருடைம்பைவிட்டு நீங்காத லஜ்ஜையென்பதுவே, நலம் செய் - அழகையுண்டாக்குகின்ற, பூண் - ஆபரணமாகும்', எனின்உம் - என்றாலும், அமளிவாய் - (புருஷனோடு கலவிநிகழ்த்தும்) படுக்கையில், நாணம் நிகழ்வுஉறா நிகழ்ச்சிஏ - நாணம் நேர்தலில்லாமையாகிய தன்மையே, நிறை உடை பெரும் பூண் அன்றோ - நிரம்பிய பேராபரணமாகு மல்லவோ? (எ - று.) |