இரண்டு கவிகள் - ஒருதொடர். (இ -ள்.) மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு - வாயுதேவனுடைய சிறந்தபுத்திரனாகிய வீமசேனனுடைய வார்த்தையைக் கேட்டு, அந்த மருச்சகன் மடம் கொடி - அக்கினிதேவனிடத்தினின்று தோன்றியவளான மடமைக்குணமுடைய கொடிபோன்ற அந்தத்திரௌபதி, உரைப்பாள் - (பின்வருமாறு) சொல்பவளானாள்: ஒழிவு இலா உரவோய் - (நீங்குதலில்லாத வலிமையுள்ளவனே! உரைத்த நாள் எல்லாம் - (பன்னிரண்டு வருஷம் வனவாசமும் ஒருவருஷம் அஜ்ஞாதவாசமுஞ் செய்யவேண்டுமென்று) சொல்லிய நாட்களெல்லாம், சில் பகல் ஒழிய ஒழிந்தன - சிலதினங்கள்போல் நீங்கப் பெரும்பாலும் கழிந்திட்டன: அருத்தியோடு - (அஜ்ஞாதவாசகாலம் இனிது கழியவேணுமே என்ற) விருப்பத்தோடு, ஒருவர் அறிவுறா வண்ணம்- பிறரெவரும் அறியாதபடி, இருந்த - இருந்திட்ட, சீர் - நிலைமை, அழிவுறும் - குலைந்திடும், என்னும் - என்கின்ற, கருத்து - எண்ணம், நின் தம்முற்கு - உனது தமையனார்க்கு, உண்மையின் - இருத்தலால், காலம் உம் தேயம்உம் உணர்வான் - (எந்தக்காலத்தில் எந்த இடத்தில் அடங்கியிருக்கவேணுமோ, எந்தக்காலத்தில் எந்த இடத்தில் வலிமையை வெளிக்காட்டவேணுமோ அந்தத்) தேசகாலங்களை யறிந்தவனான அந்தத்தருமன், தடுத்தான் - (இராசசபையிலேயே நீ கீசகனை அப்போதே மரத்தினால் மோதி யொழிக்க முயல்வதைத்) தடுத்திட்டான்; (எ - று.) இதனால், யுதிஷ்டிரன் மானக்கேடுநிகழ்கையிலும் அதற்குப் பதில் செய்யவொட்டாது என்னை யடக்கிச் சிறுமையை விளைக்கின்றானென்று அவன்மீது வீமன் குறைகூறியதற்கு, அவன்செயல் தக்கதே யென்று திரௌபதி காரணத்துடன் சமாதானங் கூறுகின்றாள். பாண்டவர் விராடநகரத்தில் பத்துமா தங்கடத்தியபின்னரே கீசகன் திரௌபதியைக் காமித்தலாகிய இச்செயல் நிகழ்ந்ததென்றும், கிட்டத்தட்ட வருஷம் முற்றுப்பெறுஞ் சமயத்தில்தான் கீசகவதம் நிகழ்ந்த தென்றும், முதனூலால் அறியப்படும்; அக்கருத்தை யுட்கொண்டே, 'உரைத்த நாளெல்லாஞ் சில்பகலொழிய வொழிந்தன' என்று திரௌபதிகூற்றாகக் கூறியது. மருச்சகன் - மருத்ஸக; காற்றை நண்பனாகவுடையவன் என்ற காரணம்பற்றி அக்கினியைக் காட்டும் வடசொல். முன் - முன்னே பிறந்தவனுக்குக் காலவாகுபெயர். (103) 52.-திரௌபதி 'இரண்டொருநாள் கழித்தபின் கந்தருவர்கொன்றா ரென்னும் வார்த்தை தோன்றுமாறு கீசகனை இரவிற் கொல்லலாம்' எனல். பாயும்வெஞ்சிறகர்க்கலுழன்முன்பட்ட பாந்தள்போற்கீசகன்பதைப்பக் காயுமதிந்தக்கங்குலிற்கடனன்றொருபகலிருபகல்கழிந்தால் நேயமோடின்றுவந்து கந்தருவர்நேர்படமலைந்தனரென்னுந் தூயசொல்விளையப்பொருவதேயுறுதியென்னவத்திரௌபதிசொன்னாள். |
|