இன்றைக்குஇவ்விடத்துக்கு வந்தது, உலப்புஉறும் - அழியும் நிலைமையை யடைந்த, எனது ஆவி-என்னுயிரை, ஈயஓ-கொடுத்தற்குத்தானோ; (எ - று.) நிலாதீபம் என்றாற்போன்ற ஒளியைத் தருவது யாதொன்றும் இல்லாமையால், செறிந்தஇருளில் கண்ணால் வழியைக் கவனிக்க முடியாமல் காலாலேயே தடவித்தடவி அன்னாள் வந்தாளென்று குறிக்க 'கால்வழி காட்ட வந்தது' என்கின்றான். கால்வழிகாண என்று பிரதிபேதம். (120) 69. | கிஞ்சுகமலர்ந்துநின்கிள்ளைவாய்மையால் அஞ்சலென்றோருரையளித்தல்காண்கிலேன் நஞ்சனவிழிக்கடைநயந்தபார்வைகொண்டு எஞ்சுமென்னுயிரினையெடுப்பதென்றுநீ. |
(இ -ள்.) கிஞ்சுகம் மலர்ந்து-பலாசமலர் போன்ற (உன்) வாயைத்திறந்து, நின் கிள்ளை வாய்மையால் - உனது கிளிபோன்ற வாய்வார்த்தையால், அஞ்சல் என்று - (காமதேவனுக்குப்) பயப்படாதே என்று, ஓர் உரை- ஒருபேச்சை, அளித்தல் - அன்போடுதர, காண்கிலேன் - பார்க்கின்றிலேன் [கேட்கிலேன் என்றபடி]: நஞ்சுஅன - விஷத்தையொத்த, விழிக்கடை- விழியின்கடையினால் [கடைக்கண்ணால்], நயந்த-விரும்பிக் காண்கின்ற, பார்வைகொண்டு - பார்வையினால், எஞ்சும்-ஒடுங்குகின்ற, என் உயிரினை-, நீ-, எடுப்பது - பாதுகாப்பது, என்று-எப்போது? (எ - று.) உயிரினையெடுப்பது - உயிரையடியோடு போக்குவதுஎன்ற ஒரு விபரீதப் பொருளுந் தோன்றும். விழிப்பது-விழி: காரணக்குறி. கருநிறத்தாலும் உயிரைக்கவருந்தன்மையாலும் விழிக்குநஞ்சுஉவமை. (121) 70. | வழிபடுதெய்வமுமற்றும்முற்றுநீ இழிபடுபிறர்முகமென்றுநோக்கலென் கழிபடருற்றதென் காமநோயெனா மொழிபலகூறினான்முகம்புகுந்துளான். |
(இ -ள்.) வழிபடு தெய்வம்உம் - (நாடோறும் நான்) கும்பிடும் கடவுளும், மற்றும் முற்றுஉம் - மற்றுமுள்ள எல்லாமும், நீ - நீயே; (இனி), இழிபடு - (உன்கட்டழகுக்கு முன்னே) இழிவாகத்தோன்றுகிற, பிறர் முகம்- அயல் மாதராரின் முகத்தை, என்றுஉம் - எப்போதும், நோக்கலென் - பார்க்கமாட்டேன்; என் காமம் நோய் - என்னுடைய காதல்நோயானது, கழி படர் உற்றது - மிகப்பரவுதலைப் பொருந்தியிட்டது, எனா - என்று, முகம் புகுந்து உளான் - அவ்விடத்துவந்து பொருந்தியவனான கீசகன், பல மொழி கூறினான்-பல வார்த்தைகளைப் பேசினான்; (எ - று.) மாறுவேடம்பூண்டு வீமன் வந்து எதிரில் தூணத்தில் ஒதுங்கிநின்கின்றானென்பதைக் கீசகன் அறியாமல் திரௌபதிதான் வந்துள்ளாளென்று கருதியதனால், இவ்வாறெல்லாம் கூறலானானென்க. |