பக்கம் எண் :

84பாரதம்விராட பருவம்

85.-வீமன் அந்தக்கீசகனுடலைத் திரௌபதியின்
பாததலத்தில் வைத்தல்.

பூங்கொடியனையவள்புறவடிப்புறத்து
ஓங்கியகீசக னுடற்பிழம்பினை
நீங்கியவாய்மைகணிகழ்ந்ததென்னவே
பாங்கினில்வைத்தடற்பவனன்மைந்தனே.

இரண்டுகவிகள் - ஒருதொடர்.

      (இ -ள்.) பூங் கொடி அனையவள் - பூங்கொடி போன்றவளான அந்தத்
திரௌபதியின், புறம் அடிப்புறத்து - புறவடியினிடத்து, ஓங்கிய கீசகன் உடல்
பிழம்பினை - (குன்றுபோல) உயர்ந்திருந்த கீசகனுடற் பிண்டத்தை, அடல்
பவனன் மைந்தன் - வலிமையுடைய வாயுகுமாரனான வீமன், நீங்கிய
வாய்மைகள் நிகழ்ந்தது என்ன-ஒழுக்கந்தவறிய வாய்வார்த்தைகளால்
நேர்ந்ததாகும் (இத்தன்மை) என்று கருதும்படி, பாங்கினில் வைத்து -
இனிதாகவைத்து, (எ - று.) - "துயரநீங்க, சுவாலைசெய்தனன்" என மேலிற்
கவியில் முடியும்.

     அந்தக்கீசகன் சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்லியதும்
நேர்மையற்ற வழியில் ஒழுகியதுமே அவன் மாண்டதற்குக் காரணமாதலால்,
அவற்றை யுணர்ந்தவர்கள் கீசகனுடற் பிழம்பினைக் காண, நீங்கிய
வாய்மைகளால் இது நிகழ்ந்ததென்ப ரென்க.  நீங்கிய வாய்மைகள் - தவறிய
நேரிய வழிகள் என்றுமாம்.                                    (137)

86.-வீமன் ஒருமரத்தைப்பிடுங்கிக் கைகளாற் பிசைந்து
தீயெழச்சுவாலைசெய்துகீசகனுடலைத் திரௌபதிக்குக் காட்டுதல்.

விடுங்குழைமராமரமொன்றுவேருடன்
பிடுங்கினன்கைகளாற்பிசைந்துதீயெழச்
சுடுங்கொலென்றஞ்சிலன்சுவாலைசெய்தனன்
நெடுங்கணாள்கண்டுதன்றுயரநீங்கவே.

      (இ -ள்.) விடும் - மேன்மேல் தோன்றுகின்ற, குழை - தளிர்களை
யுடைய, மராமரம் ஒன்று - ஒருமராமரத்தை, வேருடன் பிடுங்கினன் -
வேரோடு பிடுங்கி, கைகளால் பிசைந்து - (தன்) கைகளால் (நெருப்புத்
தோன்றுமாறு அந்தமரத்தைப்) பிசைந்து, தீ எழ சுடும் கொல் என்று
அஞ்சிலன் - (அங்ஙன் பிசைந்தபோது அதினின்று) அக்கினி தோன்றவும்
சுடுமோ என்று சிறிதும் அஞ்சாதவனாய், நெடுங் கணாள் கண்டு தன் துயரம்
நீங்க-நீண்ட கண்களையுடையவளான திரௌபதி கண்டு தன்துயரம் நீங்குமாறு,
சுவாலை செய்தனன்-(தோன்றிய நெருப்பைக்) கொழுந்துவிட்டெரியச் செய்தான்
;(எ - று.)

     பிடுங்கினன், அஞ்சிலன் - முற்றெச்சங்கள்.                  (138)