பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 85

வேறு

87.-வீமன்உன்னைக்காதலித்தோர்இவனைப்போலவேயாவரென்று
சொல்லித் திரௌபதியையனுப்பிவிட்டுத் தானுஞ் செல்லல்.

வாச மென்குழன் மாதுநல்லாயுனை
ஆசை கொண்டவ ரிப்படியாவர்காண்
ஏசின் மங்கைநல் லாயினியேகெனா
மாசி லானு மடைப்பளியெய்தினான்.

   
(இ - ள்.) 'வாசம் மெல் குழல் மாது நல்லாய் - நறுமணமுள்ள மெல்லிய
கூந்தலையுடைய அழகிய பெண்ணே! உனை ஆசை கொண்டவர் - உன்னை
விரும்பியவர், இப்படி ஆவர்காண் - இந்தக்கீசகன்போலவேயாவர் கண்டாய் :
ஏசு இல் மங்கை நல்லாய் - குற்றமற்ற மங்கைப் பருவமுள்ள பெண்ணே !
இனி ஏகு - இனிச் செல்வாய்,' எனா - என்றுசொல்லி(த் திரௌபதியை)
யனுப்பிவிட்டு,-மாசுஇலான்உம் - மனம்மாசுநீங்கிய அந்த வீமனும், மடைப்பளி
எய்தினான் - (தனக்கு உரிய இடமாகிய) சமையலிடத்தை யடைந்தான்.

     இதுமுதல் இந்தச்சருக்கம் முடியுமளவும் இருபத்தொரு கவிகள் -
பெரும்பாலும் முதற்சீரும் மூன்றாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றையவை
விளச்சீருமாகிவந்த அளவடிநான்குகொண்ட கலிவிருத்தங்கள்.

88.-அப்போதுதோன்றியபலவகையோசையால்
கீசகன்தம்பிமார்துயிலுணர்தல்.

தோட்டுமென்மலர்ச்சோலையினோதையும்
மோட்டுவன்கரமுட்டியினோதையும்
மாட்டுவன்சுதைமண்டபத்தோதையும்
கேட்டுணர்ந்தனர்கீசகன்றம்பிமார்.

      (இ -ள்.) தோடு - அகவிதழ்களையுடைய, மெல் மலர்-மெல்லிய
புஷ்பங்களையுடைய, சோலையின் - சோலையிலே, ஓதைஉம் -
(மானுடசஞ்சாரம் முதலியவற்றால் தோன்றிய) ஓசையையும், மோடு வல் கரம்
முட்டியின் ஓதைஉம் - பருத்த வலிய கைம்முட்டிகளால் மோதியதனாலான
ஓசையையும் மாடு வள் சுதை மண்டபத்து ஓதைஉம் - (அச்சோலைக்குப்)
பக்கத்திலேயுள்ள வளவிய சுண்ணாம்புபூசிய மண்டபத்தினின்று தோன்றிய
ஓசையையும், கேட்டு-, கீசகன் தம்பிமார் - உபகீசகர்யாவரும், உணர்ந்தனர் -
துயிலுணர்ந்தார்கள் ; (எ - று.)                                 (140)

89.-மூன்றுகவிகள் -ஒருதொடர்:
உபகீசகர் தம்மனத்திற்கருதியதைக் கூறும்.

தொய்யிலாதிசுதேட்டிணைக்கொப்பனை
கையிலாரழ கேறக்கவின்செயும்
தையலாள்பொருட்டாகத்தனக்குறு
மையலான்மிகவாடிவருந்தினான்.