(இ -ள்.) சுதேட்டிணைக்கு - விராடன்மனைவியான சுதேஷ்ணையென் பவளுக்கு, தொய்யில் ஆதி - தொய்யில்முதலிய, ஒப்பனை - அலங்காரங்களை, கையில்-(தன்) கையினால், ஆர் அழகு ஏற-நிரம்பிய அழகு பொருந்த, கவின் செயும் - அலங்கரிக்கவல்ல, தையலாள் பொருட்டாக - பெண்ணின்நிமித்தம், (நமது அண்ணனாகிய கீசகன்), தனக்கு உறு மையலால் - தனக்குப் பொருந்திய காமமயக்கத்தால், மிக வாடி-, வருந்தினான் - வருத்தமுற்றிருந்தான் ; (எ - று.) தொய்யில் - மகளிரின் தோள்களிலும் தனங்களிலும் சந்தனக் குழம்பால் எழுதுங் கோலம். (141) 90. | வண்டறாதமலர்க்குழல்வல்லியைக் கண்டகாவிலிக்கங்குற்பொழுதிடைச் சண்டவேகக்களிறன்னதன்மையான் கொண்டமாலிற்குறுகினன்போலுமால். |
(இ -ள்.) (ஆகையால்), வண்டு அறாத மலர் குழல் வல்லியை) வண்டுகள் நீங்காத மலர்களையணிந்த கூந்தலையுடைய கொடிபோன்ற பெண்ணாகிய அந்தவண்ணமகளை, கண்ட - பார்த்த, காவில்-சோலையிலே, இ கங்குல் பொழுதிடை - இந்தஇராத்திரியிலே, சண்டம் வேகம் களிறு அன்ன தன்மையான் - கொடிய வேகத்தையுடைய மதயானைபோன்ற தன்மையையுடையனான (நம்அண்ணனான) கீசகன், கொண்ட - (தான்) அடைந்துள்ள, மாலின் - காமமோகத்தினால், குறுகினான்போலும் - நெருங்கினான்போலும் ; (எ - று.) போலும் என்பது - அந்தஉபகீசகர்கள் தம்ஊகத்தைப்பேசுகின்றா ரென்பதைப் புலப்படுத்தும். ஆல் - ஈற்றசை. (142) 91. | தூவிவாசந்துளிமதுச்சோலையில் ஏவலாலியற்றும்மெழிற்பாவைமெய்க் காவலாகிய கந்தருவப்பெயர்த் தேவரால்வெஞ் செருவுளதானதோ. | (இ - ள்.) வாசம் தூவி-நறுமணத்தைச் சிதறவிட்டுக்கொண்டு-மது துளி - தேனைச் சொட்டுகின்ற, சோலையில் - அந்தச்சோலையிலே,-ஏவலால் - (அரசன்தேவியின்) கட்டளைப்படியே, இயற்றும் - பணிசெய்கின்ற, எழில் - அழகிய, பாவை-பிரதிமை போன்றவளான அந்த வண்ணமகளின், மெய்- உடலுக்கு, காவல் ஆகிய -, கந்தருவப் பெயர் தேவரால்-கந்தருவரென்று பேர்பூண்ட தேவவர்க்கத்தவரோடு, வெம் செரு-கொடியபோர், உளது ஆனதுஓ - நேரிட்டதோ? (எ - று.) - அதனால்தான் இவ்வாறான ஓசைகள் தோன்றியிருக்க வேண்டுமென உணர்ந்த உபகீசகர் எண்ணினார் என்று வருவித்து முடிக்க. சோலையில் காவலாகிய கந்தருவப்பெயர்த்தேவரால் செரு உளதானதோ? என்க. (143) |