101. | போனபோனதிசைதொறும்போய்த்தொடர்ந்து ஆனவானவனொக்கவக்கோட்டினால் மானமும்மவராவியும்வாங்கினான் ஏனையோர்களுந்தம்முனொடெய்தினார். |
(இ -ள்.) போன போன திசைதொறுஉம் - (உபகீசகர்) ஓடிப்போன திக்குக்களிலெல்லாம், தொடர்ந்து போய் - (அவர்களைத்) தொடர்ந்து சென்று, ஆன - (திரௌபதியைக் காப்பதற்காக) வந்த, வானவன் ஒக்க - கந்தருவதேவனையொப்ப (த்தோன்றி), அ கோட்டினால் - அந்த மரக்கிளையினால், மானம்உம் - (அவர்களுடைய) கருவத்தையும், அவர் ஆவிஉம் - அவர்களுடைய உயிர்களையும், வாங்கினான் - (வீமன்) பறிக்கலானான்: ஏனையோர்கள்உம் - மற்றையோரான உபகீசகர்களும், தம்முனொடு எய்தினார் - தம் அண்ணனோடு போய்ச் சேர்ந்தார்கள் [இறந்தார்கள்]: (எ - று.) தொடர்ந்து-, ஆன - பொகுந்திய, வானவன் - பெரியோனான வீமசேனன், ஒக்க - ஏற்க என்று உரைப்பாரு முளர். இரண்டாமடியில், ஆனைமானவனக்கொடுங்கோட்டினான் என்றும் பாடம். (153) 102.-ஊரார் வருந்துதல். துவன்றகற்புடைத்தோகையைவிட்டுமுன் நுவன்றகீசகர் நூற்றொருமூவரும் அவன்றனவாகுவினாலழிவுண்டபின் கவன்றதாலக் கடிநகரெங்குமே. |
(இ -ள்.) துவன்ற - நெருங்கிய, கற்பு உடை-பதிவிரதைத் தன்மையை யுடைய, தோகையை - மயில்போன்ற சாயலையுடையளான திரௌபதியை, விட்டு-(தாம் ஈமவெரியிலிடுமாறு பற்றியிருந்ததை) விட்டிட்டு, முன் நுவன்ற கீசகர் நூற்றொருமூவர்உம் - முன்னே சொன்ன உபகீசகர் நூற்றுமூன்று பேர்களும், அவன் தன் வாகுவினால் - அந்த வீமசேனனுடைய கையினால், அழிவுண்டபின்-இறந்து விட்டபிறகு, அ கடி நகர் எங்குஉம் கவன்றது - அந்தக் காவலுள்ள நகரம்முழுதும் வருந்திற்று; (எ - று.)-ஆல் - ஈற்றசை. ஏககாலத்தில் விராடனுடைய தேவியின் தம்பியர்யாவரும் இறந்தது குறித்து நகரத்தவர் சோகித்தன ரென்பதாம். நகரத்துக்குப் பாதுகாவல் குறைந்திட்டது குறித்துச் சோகித்தன ரெனலுமாம். நூற்றொடொரைவரும் என்றுபாட மிருக்கலாம். (154) 103.-இரண்டுகவிகள் ஒருதொடர் :நகரத்தவர்கீசகவதத்தால் நடுங்கிட, வீமனும் திரௌபதியும் தத்தமிடத்தைச் சேர்தல் கூறும். கற்கும்யாழுடைக்கந்தருவர்க்கெதிர் நிற்பரோவுடனேர்பொரமானவர் கிற்குமைந்துடைக்கீசகர்யாவரும் தற்கினான்மடிந்தார்தகவொன்றிலார். |
|