(பெரும்பாலும்) கழிந்திட்டது; மீண்டு தோன்றுதும் - (விரைவில் தானே நிஜரூபத்துடன்) மறுபடியும் வெளிப்படுவோம்,' என்று - என்றுகருதி, பான்மையின் - (அதற்கேற்ற) மனப்பான்மையோடு, நண்ணினார் - பொருந்தியிருந்தார்; (எ - று.) விரதராம் பாண்டுமைந்தர் - அஜ்ஞாதவாசஞ்செய்யுமாறு விரதம் பூண்ட பாண்டவரென்க. (159) கீசகன் வதைச்சருக்கம்முற்றிற்று. ------ நான்காவது *நிரைமீட்சிச் சருக்கம். இத்தொடர்மொழி - நிரையினது மீட்சியைக் குறித்த சருக்கம் எனவிரியும்;நிரைமீட்சி - ஆறாம் வேற்றுமைத்தொகை: மீட்சிச்சருக்கம் - இரண்டாம்வேற்றுமையு ருபும்பயனும் உடன்தொக்கதொகை. நிரை - பசுக்கூட்டம். மீட்சி - மீளுதல்: சருக்கம் - ஸர்க்கம் என்ற வடசொல்லின் விகாரம்; முடிபு அல்லது படைப்பு என்று பொருள்; அது சங்கேதத்தால், பெரியவகுப்பினுட்பட்ட சிறிய பாகத்தைக் குறிக்கும்: எனவே, பாண்டவர்கள் மச்சதேசத்த இராசதானியில் விராடராஜனை யடுத்து அஜ்ஞாதவாசஞ் செய்கின்றபோது துரியோதனாதியர் கவர்ந்துகொண்டுபோன விராடராஜனது பசுக்கூட்டங்களை அவர்களைவென்று திருப்பிக்கொண்டுவந்த வரலாற்றைக் கூறும் கூறுபாடு என்பது பொருள். இதுநிரைமீட்டலாகிய புறத்திணைஏழனுள் வெட்சித்திணையின் பாற்படும்.அஃதாவது - பெருவேந்தர் பொருவதுகருதியக்கால் பொரக்கருதியவர்மற்றவர்நாட்டு வாழும் ஆவும் அந்தணரும் முதலியன தீங்குசெய்யத்தகாதசாதிக ளாதலின், அவற்றை அங்குநின்றும் அகற்றல்வேண்டிப் போதருக எனப்புகன்று, அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினால் தாமேகைக்கொண்டு போந்து மீளாமற் பாதுகாத்தலும், அங்ஙனங்காக்கப்படும்நிரையை மற்றை வேந்தர் சென்று பொருது மீட்டுக்கொண்டுவந்துபாதுகாத்தலுமாம். இது, ஆசிரியர் தொல்காப்பியனார் கொள்கை. வேறுசிலர்கொள்கைப்படி, நிரைகவர்தல் வெட்சித்திணையெனவும், நிரைமீட்டல்கரந்தைத்திணையெனவும்படும். நிரைகவர்பவர்க்கு வெட்சிமலர்மாலைசூடுதலும், நிரைமீட்பவர்க்குக் கரந்தைமலர்மாலை சூடுதலும்உரியன.
*இந்த நிரைமீட்சிச் சருக்கத்தின் உரை காலஞ் சென்ற ஸ்ரீ உ. வே. சடகோபராமாநுஜாசார்யஸ்வாமிகள் ஸ்ரீ உ. வே. சே. கிருஷ்ணமாசார்ய ஸ்வாமிகள் எழுதியவற்றைப் பெரும்பான்மையும் கொண்டது. |