இந்நிரைமீட்சிச்சருக்கத்தின்கதைச்சுருக்கம்:- பாண்டவர்களுடைய அஞ்ஞாதவாசகாலத்தினிறுதியில், துரியோதனன், பாண்டவர்கள் விராட நகரத்தில் இருக்கலாமென ஒருவாறு ஊகித்து உணர்ந்து, அவர்களைக்கண்டு பிடிக்கும்படி படையெடுத்துச்சென்று, அந்நாட்டை இருபுறத்தும் வளைத்துப் பசுக்கூட்டத்தைக் கவர்ந்துசெல்லலானான். அப்போது அருச்சுனனொழிந்த நால்வரும் விராடனுடன் சென்று தென்புறத்தில் திரிகர்த்தரையும், விராட குமாரனான உத்தரனுக்குத் தேரூர்ந்துசென்ற பேடிவடிவினனான அருச்சுனன் வடபுறத்தில் துரியோதனாதியரையும் போரில் வென்றனர்: அப்போது முன்னைய ஏற்பாட்டின்படி வனவாச அஞ்ஞாதவாசங்கழிந்ததும் பாண்டவர்களும் திரௌபதியும் நிஜரூபங்கொள்வாராயினர் என்பது. 1.-கடவுள் வணக்கம்:விஷ்ணுஸ்துதி. தொழுவார்தம்வினைதீரமுற்கோலமாய் வேலைசூழ்பாரெயிற்று உழுவானைநன்னாமமொன்றாயினுங் கற்றொருருவோதினார் வழுவாதசுரரராகநரராகபுள்ளாகமாவாகபுன் புழுவாகவொன்றிற்பிறந்தாலுநரகிற்புகார்காணுமே. |
(இ -ள்.) தொழுவார்தம் - (தன்னை) வணங்கியப் பிராத்தித்த தேவர் முனிவர் முதலியோரது, வினை - தீவினை, தீர - நீங்கும்படி, முன் - முற்காலத்தில், கோலம் ஆய் - வரகாவதாரமாய், வேலை சூழ் பார் - கடல் சூழ்ந்த நிலவுலகத்தை, எயிறு உழுவானை - கோட்டாற் குத்தியெடுத்த திருமாலினது, நல் நாமம் - நல்ல (ஆயிரத்தெட்டுத்) திருநாமங்களுள், ஒன்று ஆயின்உம் - ஒரு திருநாமத்தையாவது, கற்று - (தாம்) அறிந்து, ஒர்உரு - ஒருமுறை, ஓதினார் - சொன்னவர்,- வழுவாத - (தம்தம் ஊழ்வினையைத்) தவறாத, சுரர் ஆக - தேவர்களாகவாயுனும் நரர்ஆக - மனிதராகவாயினும், புள் ஆக - பறவைகளாகவாயினும், மா ஆக - விலங்குகளாகவாயினும், புன் புழு ஆக - (எல்லாப் பிறவிகளுள்ளும்) புல்லிய [இழிபிறப்பான] புழுக்களாக வாயினும், ஒன்றில் - யாதாயினும் ஒருபிறப்பில், பிறந்தால்உம் - தோன்றி னாலும், நரகில் - நரகலோகத்தில், புகார் - சென்றுசேரமாட்டார்; (எ - று.) - ஏகாரம் - ஈற்றசை. கடவுளின் திருநாமத்தைக் கூறியவர் ஒருகால் எஞ்சிய பிராரப்தவினையால் சுரர்முதலிய பிறவியில் தோன்றினும் நரகத்தையடையாரென்க. முன்னொருகாலத்திற் பூமியைப் பாயாகச் சுருட்டியெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிப்போன இரணியாக்ஷனென்னும் அசுரராசனைத் திருமால் தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளின்படி வராகரூபமாகத் திருவவதரித்துக் கொன்று பூமியைக் கோட்டாற்குத்தி யெடுத்துக்கொண்டு வந்து விரித்தருளின வரலாற்றை உட்கொண்டு, 'தொழுவார்தம்வினைதீரமுற்கோலமாய் வேலைசூழ் |