பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 99

போதரும். இனி, ஒன்றும்என்பதனை எண்ணாகக் கொள்ளாது
பெயரெச்சமாகக் கொண்டு, 'தேவர்க்குப்பொருந்திய நாட்கள் பன்னிரண்டுங்
கழிந்தன; இனி, ஒருநாளைக்குள்ளே கரந்து உறைபவரைக் கண்டறிமின்'
என்றுமாம்.

      ஈராறு- பண்புத்தொகை.  சென்ற - முற்று.  'நம்முடன்' என்ற
தனித்தன்மைப்பன்மை, செருக்குப்பற்றி வந்தது.  முன்னர், அர் - சாரியை. 
ஐவர் - தொகைக்குறிப்பு. ஓராயிரங்கோடி என்றது - மிகப்பலவாய
எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு.  ஒற்றாள் - தேயமெங்குஞ் சென்று கண்டு
ஆங்காங்கு நிகழ்வனவெல்லாம் ஒற்றியுணர்ந்து வருகின்ற ஆள்;
வினைத்தொகை: ஒற்றாகிய ஆள் எனக்கொண்டால்,
இருபெயரொட்டுப்பண்புத்தொகையாம்.  ஒற்று - ஒற்றன்;
உயர்திணைப்பொருள்தரும் அஃறிணைச் சொல்.                 (162)

4.-மீண்டுவந்த ஒற்றர் தாம்பாண்டவரைக்காணாமையைத்
தெரிவித்தல்.

காடென்றுமலையென்றுநதியென்றுகடலென்றுகடலாடைசூழ்
நாடென்றுநகரென்றுநாடாததிசையில்லைநாடோறும்யாம்
தோடென்றுதாதென்றுதெரியாதுமதுமாரிசொரிமாலையாய்
நீடென்றுவலமேவுமவனிக்குளவரில்லைநின்பாதமே.

      (இ -ள்.) (ஓடிவந்த ஒற்றர்கள், துரியோதனனைநோக்கி), 'தோடு என்று
தாது என்று - பூவிதழ்இதுவென்றும் பூந்தாது இதுவென்றும், தெரியாது -
பகுத்தறியவொண்ணாதபடி, மது மாரி சொரி - தேன்மழையை மிகுதியாகப்
பொழிகின்ற, மாலையாய் - (நந்தியாவட்ட மலர்) மாலையையுடையவனே!- காடு
என்று - காடுகளும், மலைஎன்று - மலைகளும், நதிஎன்று - ஆறுகளும்,
கடல்என்று - கடல்களும், கடல் ஆடை சூழ் நாடு என்று - கடலாகிய
சேலையினாற் சூழப்பட்ட தேசங்களும், நகர் என்று - பட்டணங்களும் ஆகிய
இவ்விடங்களில் [பூமி முழுவதும்], யாம்-, நாள்தோறும்-, நாடாத திசை இல்லை
- தேடிப்பாராத இடம் (சிறிதும்) இல்லை [முழுவதுந் தேடிவந்தோம்]; நீடு
என்று - நீண்ட சூரியன், வலம் மேவும் - சுற்றிவருகின்ற, அவனிக்குள் -
பூமியிலே, அவர் இல்லை - அப்பாண்டவர்கள் (எங்கும்) இல்லை; நின்பாதம்ஏ
- உன்திருவடிகளாணை,' (என்று கூறினார்); (எ - று.)

     'சூரியனொளி செல்லுமிடமெல்லாஞ் சுற்றித்தேடினோம், இல்லை'
என்றார்.  தம் வார்த்தை வாய்மையே யென்றதற்கு, 'நின்பாதத்தாணை'
என்றார்; இவ்வாறு சேவகர்கள் எசமானனிடத்துக்கூறுவது இயல்பு.  'ஆணை'
என்பது, வருவித்து உரைக்கப்பட்டது.  'நின்னாணை' என்ற பொருளில்
'நின்திருவடியாணை' என்றது, தமது பணிவுதோன்றக்கூறும் உபசாரமொழி.
அழிவின்றி நெடுங்காலம் இருத்தலாலும்,  நெடுந்தூரஞ்சென்று விளங்கும்
ஆயிரங்கிரணங்களை யுடைமையாலும், உலகமுழுவதும் ஒளிர்வதாலும்,
'நீடென்று' எனப்பட்டது.  நீடு அவனி யெனவும் இயைக்கலாம்.  தாது -
மகரந்தப்பொடி, பூந்துகள்.