பக்கம் எண் :

1

முதலாவது

உலூகன் தூது சருக்கம்

   உலூகனது தூதின் செய்கையைக் கூறுகின்றதொரு நூல் கூறுபாடென்பது
பொருள்.  உலூகன் - பாண்டவர்களால் துரியோதனாதியரிடம்
அனுப்பப்பட்டானொரு அந்தணன்.  தூது-இங்கே தூதுசென்ற செய்தி. சருக்கம்
- முடிபு அல்லது படைப்பு என்று பொருள்: அது சங்கேதத்தால், 'இந்நூலில்
ஒரு பெரிய வகுப்பினுட்பட்ட சிறிய பாகத்தைக் குறிக்கும். இம்மூன்று சொற்கள்
தொடர்ந்ததொரு தொடர்மொழியிலுள்ள இரண்டுபுணர்ச்சியுள் முன்னது ஆறாம்
வேற்றுமைத்தொகையும், பின்னது இரண்டனுருபும் பயனுமுடன்
தொக்கதொகையுமாம்.  இனி, பின்னதைத் தூதினது சம்பந்தமான சருக்கம்
எனவிரித்து, விஷயமரிவுடைமையாகிய சம்பந்தப்பொருளில் வந்த ஆறாம்
வேற்றுமைத்தொகை யென்றுங் கொள்ளலாம்.  பாண்டவர்கள் அஜ்ஞாதவாசம்
கழிந்தபின் கண்ணன் முதலானாரோடு ஆலோசித்து  முடிவுசெய்த
உலூகனென்னும் அந்தணனை திருதராட்டிரனிடம் தூதனுப்ப அவ்வேதியன்
சென்று செய்திகூறி, அங்குத் துரியோதன துரோணர் முதலிய பெரியோர்கள்
பலர் சொல்லவுங் கேளா கர்ணன் முதலிய சிற்றினத்தவரின் கருத்தையே
முக்கியமாக தழுவிச் சிறிதும் இராச்சியங்கொடுக்கமாட்டேனென்று
சொல்லிவிட்டதைக் கேட்டுவந்து பாண்டவர்களுக்குங் கண்ணபிரானுக்கும்
தெரிவித்த செய்தியை விளக்கும் பாகமென்பது திரண்ட பொருளாம். 'தூதுச்
சருக்கம்' என்ற பாடத்துக்கு - இரண்டாம் வேற்றுமைத்தொகையாதலின், சிறப்பு
விதியால் வலிமிக்கதென்க: 'சஞ்சயன் தூது சருக்கம்' 'கிருஷ்ணன்
தூதுசருக்கம்'  என்றவற்றிற்கும் இங்ஙனமே காண்க.

கடவுள் வணக்கம்.

1.மீனமாகியுங்கமடமதாகியுமேருவையெடுக்குந்தா
ளேனமாகியுநரவரியாகியுமெண்ணருங்குறளாயுங்
கூனல்வாய்மழுத்தரித்தகோவாகியுமரக்கரைக்கொலைசெய்த
வானநாயகனாகியுநின்றமான்மலரடிமறவேனே.

    (இ - ள்.) மீனம் ஆகியும்-மீன்வடிவமாயும், கமடமது ஆகியும் - ஆமை
வடிவமாகியும், மேருவை எடுக்கும் தாள் ஏனம் ஆகியும் - மகா
மேருமலையைத் தாங்கவல்ல பாதத்தை யுடைய பன்றியுமாயும், நர அரி
ஆகியும் - நரசிங்க வடிவமாயும், எண் அரு ஆயும் - (இத்தன்மையதென்று)
நினைத்தற்கும் அருமை வாமனவடிவமாகியும், கூனல் வாய் மழு தரித்த கோ
ஆகியும் - வளைவான நுனியையுடைய கோடாலிப்படையை (க் கையில்)
பரசுராம வடிவமாயும், அரக்கரை கொலைசெய்த வானம்