பக்கம் எண் :

102பாரதம்உத்தியோக பருவம்

கையிலுள்ளஅம்பு, இருப்பது -; (அப்படியிருக்க), இவன் - இத்தருமன், முகில்
தோய் பூகம் மீ வரால் உகளும் வயல் குரு நாடு - மேகங்களை அளாவ
உயர்ந்த பாக்குமரங்களின்மீது வரால் மீன்கள் குதிக்கப் பெற்ற
(நீர்வளச்சிறப்பையுடைய) கழனிகளையுடைய குருநாட்டை, அவன் பால்
வேண்டும் ஆறு - அத்துரியோதனனிடம் இரக்க விரும்பும் விதம், என் - யாது
காரணத்தால்? (எ - று.)

     அசுரர்தேவர்களினும் மூத்தவராதலால், "பழையதெயித்தியர்" என்றது;
இதுபற்றி, அசுரர்க்கு 'பூர்வதேவர்' என்று ஒரு பெயர்; இக்காரணத்தால் கீழ்
நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கத்தில் அவர்களை 'புரோசநம்' என்றதுங்
காண்க.  தைத்தியர் - (காசியபமுனிவரது மனைவிமார்களுள்) திதியென்பவளது
புத்திரர்; தத்திதாந்தநாமம்; அது, தெயித்தியர் என்ற போலி விகாரம் பெற்றது.
இரண்டாமடியின் முதலில் எவராயினும் என்றும் பாடம்.  உயிருண - உயிரை
உடம்பினின்று கவர்ந்து கொள்ள என்றபடி; 'உண்டற்குரிய வல்லாப்பொருளை,
உண்டனபோலக் கூறலு மரபே' என்று தொல்காப்பியத்துச் சொல்லப்பட்ட மரபு
வழுவமைதியால் உண்ணாததும் உண்ணப்படாததும் - உண்பதும்
உண்ணப்படுவதுமாக உரைக்கப்பட்டன.  உணவு என்று எனப்பிரித்து, உயிரைத்
தனக்கு இரையென்று கருதியிருப்பதென்றலுமாம்.

     திருப்பாற்கடலில் எழுந்தருளியுள்ளதிருமாலின் வியூகமூர்த்திகளாகிய 
வாஸு தேவன், ஸங்கர்ஷணன், பிரத்யும்நன், அநிருத்தன் என்ற நால்வருள்,
பிரதானமூர்த்தியான வாசுதேவன், பிரம விஷ்ணுருத்திர ரூபிகளாய்ப்
படைத்தல் காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்யும் மற்றை மூவர்க்குங்
காரணனாதலால்,அந்நிலையைக்கருதி, 'மூவராயவர்களுக்கும் முதல்வனாகிய
மூர்த்தி' என்றார்;இனி, "முதலாவார்மூவரே அம்மூவருள்ளும், முதலாவான்
மூரிநீர்வண்ணன்","தேவராய்த்தேவர்க்குந் தெரியாத வொளியுருவாய்,
மூவராய் மூவர்க்குள்முதல்வனாய் நின்றோய் நீ" என்றவற்றை அடியொற்றி
'மூவராயவர்களுக்குண்முதல்வனாகிய' எனப் பாடங்கொண்டு
திரிமூர்த்திகளுள்ளும்மற்றையிருமூர்த்திகளுக்குக் காரணமாகிய மூர்த்தியே
என்றும் உரைக்கலாம். "நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனுந்,
தான்முகமாய்ச்சங்கரனைத் தான்படைத்தான்" என்றார் பெரியாரும். மூவராய்
அவர்களுக்கும்முதல்வனாகிய எனப் பிரித்தும் உரைக்கலாம். மூவர் என்ற
தொகைக்குறிப்பின்மேல், ஆயவர்கள் - பகுதிப்பொருள்விகுதி.  மூர்த்தி -
இயல்பாகியஅண்மைவிளி.

    முகில்தோய் பூகம் மீ வராலுகளும் வயல் - பாக்குமரங்களின் உயர்ச்சிச்
செழுமையையும், மீன்களின் துள்ளற்கொழுமையையும் விளக்கியவாறு.
பாக்குமரத்திற்கும் மேகத்திற்கும் வரால்மீனுக்கும் சம்பந்தமில்லாதிருக்கவும்,
சம்பந்தத்தைக் கற்பித்துக்கூறியது - தொடர்புயர்வுநவிற்சியணி;இதனால்,
நாட்டின் வளம் தொனிக்கும்.