யதுகுலத்தரசர்களுள்வசுதேவனுக்கு உடன் பிறந்த முறையாகிய சத்தியகனது குமாரனும், பிராயத்தில் பலராமகிருஷ்ணர்களினும் இளையவனுமாதலால், சாத்தகி இவர்க்குத் தம்பி முறையாவன். இவன் கண்ணனிடம் மிகுந்த அன்புகொண்டு அவனது கருத்துக்குச் சிறிதும் மாறுபடாது நடப்பவன். அன்றியும், இவன் அருச்சுனனிடம் வில்வித்தையைக் கற்றறிந்த மாணாக்கனாதலால், ஆசிரியனாகிய அருச்சுனனிடத்தும் மற்றைப் பாண்டவரிடத்தும் நீதிமுறைவழுவாது அன்பு கொண்டொழுகுபவன்; ஆதலால், பாண்டவர்க்கு விரோதமாக அக்கிரமமாகப் பேசின பலராமன் தனக்குத் தமையனாயினும், மனம் பொறாது அவன்பால் மாறுபாடு கொண்டான். 'நின் திருவடிவினும் மிக வெள்ளையாகியது' என்றது பலராமன் வெண்ணிறமுடையவனாதலால்; அதனை "மடல் சேர்கழு நீர்மலர் வாட்கணுரோணி செம்மல், சுடர்கான் மதியிற் சுடர்கின்ற தொர்தோற்றமேய, அடலேறனையான்" என்ற பாகவதத்தாலும் அறிக. சாத்தகி- சத்யகனது குமாரனென்று பொருள்; பிள்ளை பொருளில் வந்த தத்திதாந்தநாமம். மாற்றம் என்பதற்கு நாவில் விளையும் என்ற அவசியமில்லாத அடைமொழி கொடுத்தது. பலராமனது நாக்கு பாண்டவர்திறத்து நடுவுநிலைமையுள்ள சொல் பயின்றறியாததென இழிவை விளக்கும்; அவர் பாண்டவர்க்கு மாறாகவே பேசுவதைப் பாரத கதையிற் பலவிடத்துங் காணலாம். தம்பிக்குத் தமையனிடம் இயல்பாக இருக்கவேண்டிய மரியாதைப் பற்றி, 'திருவடிவு' என்றார்; இனி இதுவும் பரிகாசத்தைப் பற்றியதாகலாம். உரைத்தலும் - உம் ஈற்று இறந்தகாலவினையெச்ச பிற்பொருளோடு விரைவுங் குறித்தது. துன்பம் நேர்கிறகாலத்து கண் இடுங்குதலால், இடுக்கண் என்பது காரணப்பெயராம்; இடுகண் என்பது இடுக்கண் என விகாரப்பட்டதென்க. 'இடுக்கண் என்றது - மலர்ந்த நோக்கம் இன்றி மையல் நோக்கம்பட வர இரக்கம்' என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இடுக்கண்களாவது தன்னைப்பற்றி வருவனவும், பிற வுயிர்களைப்பற்றி வருவனவும் தெய்வத்தைப்பற்றி வருவனவும் என மூவகையான் வரும் பிற துன்பங்கள். களையும்-எதிர்காலப் பெயரெச்சம், காலங்குறியும் தன்மை குறித்தது. இருவர் என்றது - சாத்தகியையும் பலராமனையும், இருவரும் ஒழிமின்-இடவழுவமைதி. 'இனி' எதிர்க்குறியாமல், இப்பொழுதென்னும் பொருள் தந்தது: "இனி நின் திரக்கமாகின்று" என புறநூனூற்றிலும், "எண்கையாய்கேண் எனக் கலித்தொகையிலும் போல என்று சொன்னானென்ற பொருளில் என்றானென வருதலைச் சொல்லெச்ச மென்பர். "வாய்ப்பாயாகவும் நாக்கடிப்பாகவும்" வார்த்தை பேசப்படுதலால், 'நா விளையும் மாற்றம்' எனப்பட்டது; "யாகாவாராயினு நாகாக்க" "ஆறாதே, நாவினாற் சுட்டவடு" என்பனகாண்க. 'வார்த்தை எனவேண்டாது கூறியது அவற்றின் பழிப்புடைமையை உணர்த்தும். 'வெண்மையதாகியது' என்னவேண்டியதை 'வெள்ளையதாகியது' என்றது, பண்பியைப் பண்பாகக் கூறின உபச்சாரம் |