சென்றுவசித்தும், கரந்து உறைந்து - (ஒருவருஷ காலம்) மறைந்து வசித்தும், கடவநாள் கழித்து - (வனவாச அஜ்ஞாத வாசங்களிற் கழிக்கக்) கடமைப்பட்டனவான நாட்களை [பதின்மூன்று வருஷங்களை]ப் போக்கி, அதன்பின் - அதன் பின்பு, கானம் நீங்கி - காட்டில்வசித்தலை விட்டு, ஈனம் இலா வகை - யாதொரு குறைவு மில்லாதபடி, வந்தார் - மீண்டுவந்தார்கள்,' என - என்று, சிறிதும் இரங்கான் ஆகின் - (இயற்கையில் தானாகச்) சிறிதும் மனமிரங்கானானால்,- மா நகரும் - பெரிய இந்திரப்பிரஸ்த நகரத்தையும், வளம் நாடும் - எல்லா வளங்களையுமுடைய குருநாட்டின் பாகத்தையும், உரிமையும் - (அதன்) அரசாட்சி உரிமையையும், தன் மொழிபடியே - தான் முன்பு சொன்ன வார்த்தையின்படியே, வழங்கான் ஆகின் - கொடானானால்,- தான் அறியாதவன் பிறர் போய் கற்பித்தால் அறிவனோ - தானாக உணராதவன் வேறொருவர் போய்ச்சொன்னால் அறிந்து அதன்படி நடப்பனோ? [மாட்டானென்றபடி]; 'மற்றைத்திறத்தார் தம் கடமையைக் குற்றமில்லாது நடத்தினர்; நாமும் நம்முடைய சொல்லைத் தவறாதுநடத்தவேண்டும்' என்று நினைத்துச் செய்பவனானால், இதுவரையிற் செய்திரானா? இனி ஒருவர் போய்ச் சொல்வதனால் செய்யப்போகிறானா? என்பது கருத்து. இத்தன்மையானவனிடத்து இனித் தூதுசெல்வதனாற் பயனில்லை யென்பது, குறிப்பெச்சம். இரங்கானாகின், வழங்கானாகின் என்ற எதிர்கால வினையெச்சங்களுக்கு இரங்கானாதலால் வழங்கானாதலால் என்று தேற்றமாகவே கருத்து; இங்ஙனம் வடமொழியிலும் உண்டு. இரங்காதவனாயினும் அவனை ஒருவாறு ஒப்புக்கொள்ளலாம்; சொன்னசொல் தவறுகிறவனிடத்து நியாயமேதென்பார்,' மொழிப்படியே வழங்கானாகின்' என்றார். கேட்பவர்க்கு எளிதாகத் தோன்றுதற்குத் தேவமானத்தாற் கணக்கிட்டுப் பன்னிரண்டுநா ளென்றும் ஒருநா ளென்றும் கூறியனுப்பினார்க ளாதலால், அதனை அநுசரித்து இங்கும் நகுலன், 'கடவநாள்' என்றான். மனிதர்க்கு ஒருவருஷம், தேவர்க்கு ஒரு நாளாம். கடவ - கடமையென்னும் பண்பினடியாப்பிறந்த பலவின்பால் வினையாலணையும்பெயர். இரட்டுறமொழிதலால் ஈனமிலா வகை என்பதற்கு - முன்பு ஏற்பட்ட நிபந்தனைக்குக் குறைவில்லாமலும், க்ஷேமமாகவும் என்க. 'தானறியாதவன் பிறர்போய்க்கற்பித்தால் அறிவனோ' என்ற பொதுப்பொருளால், துரியோதனன் கண்ணன் சொன்னாலும் இராச்சியங் கொடானென்ற சிறப்புப்பொருளைப் பெறவைத்தது, பிறிதுமொழிதலணியின் பாற்படும். 'இரங்கானாகி' என்று பாடங்கொண்டு, இரங்காதவனாய் வழங்கானானால்' - 'தூது அனுப்பினாலும் வழங்கான்' என்று வருவித்துப் பொருள்கூறின், இச்செய்யுள் வேற்றுப்பொருள்வைப்பணியாம். இரண்டாமடியிலுள்ள 'ஆகின்' என்பதற்கு, ஆய் எனப்பொருள் கொள்ளவும் இடமுண்டு. "இடம்பட மெய்ஞ்ஞானங்கற்பினுமென்று, மடங்காதாரென்று மடங்கார் - தடங்கண்ணாய், உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினுங், கைப்பறா பேய்ச்சுரையின் காய்' என்ற நாலடியார்ப்பாட்டை இங்கே அறிக. (89) |