30.-கண்ணன் கட்டளையிடசகாதேவன் கூறத்தொடங்குதல். நகுலனிவை யுரைத்ததற்பி னன்றெனக்கை யமைத்தருளி நகுலன்சொல்லும், இகல்விசயன்றன் மொழியுந்திறல்வீமனியம்பியதும்யாவுங் கேட்டோம், புகலரியவுணர்வுடையோய் புகழுடையோய்திறலுடையோய் புகனீயென்ன, முகிலனைய திருமேனி முகுந்தனுக்குமனமுருக மொழிகின்றானே. |
(இ -ள்.) நகுலன் இவை உரைத்ததன் பின் - நகுலன் இவ்வார்த்தைகளைச் சொன்னதன் பின்பு, - (கண்ணபிரான்),- நன்று என - 'இதுநன்றாயுள்ளது' என்றுகருதி, கை அமைத்தருளி - (போதுமென்று) கையமர்த்திக் குறிப்புக்காட்டி அடக்கியருளி,- (சகதேவனைப்பார்த்து),- 'நகுலன் சொல்லும் - நகுலனது வார்த்தையையும், இகல் விசயன்தன் மொழியும் - பராக்கிரமத்தையுடைய அருச்சுனனது வார்த்தையையும், திறல் வீமன் இயம்பியதும் - வலிமையையுடைய வீமசேனன் கூறியதையும், யாவும் - (முன்னும் பின்னும் தருமன் கூறியதையும்) எல்லாம், கேட்டோம்-; புகல் அரிய உணர்வு உடையோய் - (எவராலும் சிறப்பித்துச்) சொல்லுதற்கு முடியாத மெய்யறிவை யுடையவனே! திறல் உடையோய் - வல்லமையை யுடையவனே! புகழ் உடையோய் - கீர்த்தியை யுடையவனே! நீ புகல் - நீ (உனது கருத்தைக்) கூறு; என்ன - என்று சொல்ல,- (உடனே சகாதேவன்),- முகில் அனைய திருமேனி முகுந்தனுக்கு - மேகத்தையொத்துக் கரிய அழகிய வடிவமுடைய கண்ணபிரானுக்கு, மனம் உருக மொழிகின்றான் - திருவுள்ளங்கரையும்படி (உத்தரங்) கூறுகின்றான்; (எ - று.) - அதனை - அடுத்த இரண்டு கவிகளிற் காண்க. திறல்- சொல்வன்மையுமாம். நகுலன் - முதலாகக் கூறியது, எதிர்நிரனிறையின்பாற்படும். விஜயன் - அருச்சுனன்; விசேஷ ஜயமுடையவனென்றும், தன்னைச் சயிப்பவரெவரு மில்லாதவனென்றும் பொருள்படும் காரணப்பெயர். முன்னையபொருளில் வி - விசேஷமும், பின்னைய பொருளில் வி - எதிர்மறையுங் குறிப்பன. விசயன், பார்த்தன், பற்குனன், கிரீடி, சுவேதவாகனன், பாகசாஸநி, கிருஷ்ணன், சவ்வியசாசி, தனஞ்சயன், (பீபற்சு, நரன், ஜிஷ்ணு) என்பன அருச்சுனனது மறுபெயர்களாம். பாண்டவர் ஐவருள் சகதேவன் தத்துவஞானியும் நிஷ்பக்ஷபாதியுமாதலால், கண்ணன் அவனை 'புகலரிய உணர்வுடையோய் புகழுடையோய் திறலுடையோய்' என உயர்த்தி விளித்தான். அதனால், எல்லாம்வல்ல கடவுளான கண்ணபிரானும் நன்கு மதிக்குஞ் சிறப்புடையவன் சகதேவனென்க. புகல் என வந்த சொல் இரண்டனுள், முதலது முதனிலைத்தொழிற்பெயர்: புகலுதல் என்று பொருள்; இங்கு, நான்காம் வேற்றுமைத்தொகை. பின்னது - ஏவல். யாவும், யா - அஃறிணைப் பன்மை வினாப்பெயர்; உம்மை - முற்று. முகுந்தனுக்கும் என உயர்வு சிறப்பும்மை படவும் பதம் பிரிக்கலாம். (90) |