31.- சகதேவன் வார்த்தை. சிந்தித்தபடி நீயுஞ்சென்றாலென் னொழிந்தாலென் செறிந்த நூறு, மைந்தர்க்குண்முதல்வனிலம் வழங்காம லிருந்தாலென் வழங்கினாலென், கொந்துற்றகுழலிவளு முடித்தாலென் விரித்தாலென் குறித்த செய்கை, யந்தத்தின்முடியும்வகை யடியேற்குத் தெரியுமோ வாதிமூர்த்தி. |
(இ -ள்.) ஆதிமூர்த்தி - (எல்லாப் பொருள்களுக்கும்) முதன்மையான கடவுளே ! சிந்தித்தபடி - (இப்பொழுது தருமபுத்திரன்) ஆலோசித்தபடி, நீயும் சென்றால் என் - நீ தூதுபோனாலு மென்ன? ஒழிந்தால் என் - அப்படிப் போகாமலிருந்தாலு மென்ன? செறிந்த நூறு மைந்தர்க்குள் முதல்வன் - நெருங்கின உறவாகவுள்ள நூறு குமாரர்களுள் முதல்வனாகிய துரியோதனன், நிலம் வழங்காமல் இருந்தால் என் - இராச்சியத்தை (எங்களுக்குக்) கொடுக்காம லிருந்தா லென்ன? வழங்கினால் என் - கொடுத்தால் என்ன? இவளும் - இந்தத் திரௌபதியும், கொந்து உற்ற குழல் - பூங்கொத்துக்கள் பொருந்தின கூந்தலை, முடித்தால் என் - எடுத்து முடித்து அலங்கரித்தால் என்ன? விரித்தால் என் - (அங்ஙனம் முடிக்காமல்) விரித்தபடியே யிருந்தால் என்ன? குறித்த செய்கை - (நீ) நினைத்த காரியம், அந்தத்தில் முடியும் வகை - கடைசியில் முடியும் விதம், அடியேற்கு தெரியுமோ - அடியேனுக்குத் தெரியுமோ? [தெரியாது என்றபடி]; (எ - று.)- எது எப்படி நடந்தாலும் எல்லாம் உனது சங்கற்பத்தின்படியே முடியுமென்பது கருத்து. நீயும்என்ற உம்மை - உயர்வுசிறப்போடு எதிரது தழுவிய எச்சம்: கீழ் உலூகன் தூது சென்றதை நோக்கி, இறந்தது தழுவிய எச்சமுமாம். 'இவளும்' என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சத்தோடு இழிவுசிறப்பு. கொந்துற்ற குழல் என்பதற்கு - திருத்தமில்லாமல் சிக்குப்பட்டு அடர்ந்திருக்கிற கூந்தலென்றுமாம். கொந்து - கொத்து என்பதன் மெலித்தல். நூறு மைந்தர் - தொகைக்குறிப்பு, மைந்தர் - திருதராட்டிரனது புத்திரர். மைந்தர் - வீரரென்றுமாம், செறிந்த - தம்மில் ஒருவரோடொருவர் ஒற்றுமைப்பட்ட என்றுங் கொள்ளலாம். அடியேற்கு - உனது அடியவனாகிய எனக்கு. ஓ - எதிர்மறை. 'அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத் தெரியுமோ' என்றது அவையடக்கமாகக் கூறியது; இங்ஙனங் கொள்ளாவிடின், அடுத்த கவியில் "ஒருவருக்குந் தெரியாதிங் குன்மாயையானறிவேனுண்மையாக" என்றதனோடு மாறுகொளக்கூறலாம். அந்தம், ஆதிமூர்த்தி - வடசொற்கள். மூர்த்தி - அண்மைவிளி. (91) 32.- இதுவும் அது. முருகவிழ்க்கும்பசுந்துளப முடியோனே யன்றலகை முலைப் பாலுண்டு, மருதிடைச்சென்றுயர்சகடம் விழவுதைத்துப் பொது வர்மனை வளர்ந்தமாலே, ஒருவருக்குந்தெரியாதிங் குன்மாயையானறிவே னுண்மையாகத், திருவுளத்துக்கருத்தெதுவோ வதுவெனக்குங் கருத்தென்றான் றெய்வமன்னான். |
|