(இ -ள்.) 'முருகு - நறுமணத்தை, அவிழ்க்கும் - வெளிப்பரப்பு கின்ற, பசுந் துளபம் - பசுநிறமான திருத்துழாய் மாலையை யணிந்த, முடியோனே - திருமுடியை யுடையவனே!- அன்று - (குழந்தையாயிருந்த) அந்தக் காலத்தில், அலகை முலை பால் உண்டு - (பூதனை யென்னும்) பேய்மகளது முலையின் பாலைப் பருகியருளியும், மருது இடை சென்று - இரட்டை மருத மரத்தின் நடுவிலே (தவழ்ந்து) சென்றும், உயர் சகடம் விழ உதைத்து - உயர்ந்த சகடாசுரனை (இறந்து) கீழ்விழும்படி காலாலுதைத்தும், பொதுவர்மனை வளர்ந்த - இடையர்களது மாளிகையிலே வளர்ந்தருளிய, மாலே - திருமாலே!- உன் மாயை - உனது மாயை, இங்கு ஒருவருக்கும் தெரியாது - இவ்விடத்தில் ஒருத்தருக்குந் தெரியாது; உண்மை ஆக யான் அறிவேன் - (அதனை) உள்ளபடி யான் அறிவேன்; (ஆதலால்), திரு உளத்து கருத்து எதுவோ அது எனக்கும் கருத்து - (உனது) மனத்தில் நிகழ்கிற எண்ணம் யாதோ அதுவே எனது எண்ணமுமாம்', என்றான் - என்று சொன்னான்; (யாவனெனில்),- தெய்வம் அன்னான் - (முக்காலத்துச் செய்திகளையும் அறிதலில்) கடவுளை யொத்தவனான சகதேவன்; (எ - று.) தத்துவஞான முடைமை தோன்ற, சகதேவன் தானே கண்ணனை நோக்கித் தன்னைப்பற்றி, 'ஒருவருக்குந் தெரியாது உன் மாயை, யான் அறிவேன் உண்மையாக' என்றான். முருகு அவிழ்க்கும் - தேனை உள்ளிருந்து சொரியு மென்றுமாம். துளபம் - திருமாலுக்கு உரியது; விஷ்ணுவின் அவதாரங்களிலெல்லாம் இது உரிய தென்க; அன்றியும், அவதாரங்களில் திருமால் அணிந்துகொள்ளும் மாலைகளெல்லாம் துளசியின் அம்சமாகுமென்பதையும் உணர்க. உயர்சகடம் - வினைத்தொகை; பண்புத்தொகையன்று: உயர்ந்த, உயர்கிற, உயரும் எனக் காலந்தோன்ற நிற்றலால். மால் - பெருமை: அல்லது, மாயை; அல்லது, அடியவர்களிடத்து மிகுந்தவிருப்பம்: அதனையுடையவனுக்குப் பண்பாகுபெயர். காடும்காடுசார்ந்த இடமுமாகிய முல்லை நிலமானது நாடும் நாடு சார்ந்த இடமுமாகிய மருதநிலத்துக்கும், மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்துக்கும் இடையிலுள்ளதனால், அந்நடுநிலமான முல்லை நிலத்தில் வாழ்கிற சாதியர்க்கு இடையரென்று பெயர்; இடையர், பொதுவர் என்பவை ஒருபொருளன. அலகை முலைப்பாலுண்ட கதை:-கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவனாதலால் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்சன், தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்து வளர்தலை அறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லுதற்பொருட்டுப் பல அசுரர்களை யேவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷசி, நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக் கொண்டிருந்த கண்ணனாகிய குழந்தையை எடுத்துத் தனது நஞ்சுதீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கி |