நீண்டகருங் குழல்சோரநின்றாளை முகநோக்கி யீண்டவரி லிளையோனுஞ்சந்துமிக வினிதென்றான். |
(இ - ள்.) அறிவு உடையோர் இருவோரும் - பேரறிவுடைய வர்களான (கண்ணன் சகதேவன் என்ற) இரண்டுபேரும்,- (பின்பு) ஆண்டு இருந்த அவை நீங்கி - அங்குத் தனியே சென்றிருந்த மண்டபத்தினின்று நீங்கி, பாண்டவர்கள் முன் எய்தி - மற்றைய பாண்டவர்கட்கு முன்னே வந்து சேர, - (அப்பொழுது), அவரின் இளையோனும் - அப்பாண்டவர்களுள் இளையவனான சகதேவனும்,- நீண்ட கருங் குழல் சோர நின்றாள் பழுது இல் புகழ் பாஞ்சாலி முகம் நோக்கி - நீட்சிபெற்ற கருநிறமுள்ள கூந்தல் விரிந்து கிடக்க நின்றவளாகிய குற்றமில்லாத கீர்த்தியையுடைய திரௌபதியின் முகத்தைப் பார்த்து, ஈண்டு சந்து மிக இனிது என்றான் - 'இப்பொழுது சந்தி [சமாதானம்] மிக நல்லது' என்று கூறினான்; (எ - று.) 'எய்தி' என்னுஞ் செய்தெனெச்சத்தை 'எய்த' எனச் செயவெனெச்சமாகத் திரித்து, 'என்றான்' என்பதனோடு முடிக்க. பாஞ்சாலி நின்றாளை - நின்றாள் பாஞ்சாலியை, உருபுபிரித்துக்கூட்டல். சந்து-தூதுமாம். துரியோதனனிடம் தூது போய்வரவேண்டு மென்பதே கண்ணன் திருவுள்ளக் கருத்தென்று தெரிந்தவனாதலின், அதற்கு இணங்கிச் சகதேவன் தானும் 'சந்து மிகவினிது' என்று கூறினனென்க. இருவர் இருவோர் என ரகரவீற்று அயல் அகரம் ஓகாரமாயிற்று. பாஞ்சாலி - பாஞ்சாலதேசத்தரசனது [துருபதனது] மகள் என்று பொருள்படும்; தத்திதாந்தநாமம். பழுதில் புகழ் - கலங்காத கற்பினாலாகியது; இவள் பஞ்சகன்னிகைகளுள் ஒருத்தியாதலின், இவளுக்கு 'பழுதில்புகழ்' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. மற்றை நால்வர்-அகல்யை , சீதை, தாரை, மந்தோதரி, ஆண்டு, ஈண்டு - சுட்டு நீ்ண்டது. நின்றாளை முகம் நோக்கி - நின்றாளை முகத்தைப் பார்த்து; இரண்டு செயப்படுபொருள்வந்த செய்வினை; உருபுமயக்கமாக, நின்றவளது முகத்தைப் பார்த்து என்றும் கொள்ளலாம். (101) 42.- கண்ணனும் அவ்வாறேகூறக் கேட்டுத் திரௌபதி வருந்துதல். தருமனுக்குங் கருத்திதுவேதமருடன்போர் புரியாமல் இருநிலத்தி லுடன்வாழ்தலெனக்குநினை வென்றுரைத்தான் வரிமலர்க்கண் புனல்சோரமலர்மறந்த குழல்சோர விரைமலர்ச்செஞ் சேவடிக்கீழ்வீழ்ந்தழுதாண் மின்னனையாள். |
(இ - ள்.) 'தருமனுக்கும் கருத்து இதுவே - யுதிட்டிரனுக்கும் இதுவே கருத்தாகும்; தமருடன் போர் புரியாமல் - நெருங்கின உறவினர்களாகிய துரியோதனாதியர்களுடனே போர்செய்யாமல், இருநிலத்தில் உடன் வாழ்தல் - பெரிய பூலோகத்திலே சமாதானமாக ஒற்றுமைப்பட்டு ஒருங்கு கூடி வாழ்வதே, எனக்கும் நினைவு - எனக்கும் கருத்தாம்;' என்று உரைத்தான்-என்று (கண்ணபிரான்) கூறியருளினான்; (உடனே),- மின் அனையாள் - மின்னற் கொடியை |