கற்கம்பத்தினிடத்தில், வந்தாய் - (நரசிங்க மூர்த்தியாகத்) திருவவதரித்தவனே! - மூலம் பேர் இட்டு அழைத்த - ஆதிமூலமேயென்ற பெயரைச் சொல்லிக்கூப்பிட்ட, மும்மதம் மால் யானைக்கு - மூன்று மதங்களையுடைய பெரியதொரு யானையைக் காத்தற்கு, நீலம் கிரிபோல் முன் நின்ற - நீலமலையொன்று நின்றதுபோல எதிரில் எழுந்தருளி நின்ற, நெடு மாலே - பெருமைக்குணமுடைய திருமாலே! தன்பெயரைச் சொல்லாமல் நாராயண நாமத்தையே சொல்லி வந்த பிரகலாதனை இரணியன் பலவகையாகக் கொல்லக்கருதி, அவையொன்றும் முடியாமல் இறுதியில் 'நீ சொன்னவிடத்தில் நாராயணன் இல்லாவிட்டால், நானே உன்னைக் கோபந்தீரக் கொன்று குருதி பருகுவேன்' என்ற சமயத்தில், அவன் காட்டின தூணினின்று புறப்பட்டதனால், 'சால முனிந்தகாலத்து' என்றது. கிருத்திரிமமான செய்கையொன்றும் முன்பே செய்து அமைத்து வைத்தற்கு உரியதல்லாத தென நன்கு விளக்குதற்கு, 'கற்றூணிடைவந்தாய்' எனப்பட்டது. யானைக்கு முன் நின்ற கதை:-இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்க விஷ்ணுபக்தியுடையவனாய் ஒருநாள் விஷ்ணுபூசை செய்கையில் அகஸ்திய மகாமுனிவர் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவன் தன் கருத்து முழுவதையுந் திருமாலைப் பூசிப்பதிற் செலுத்தியிருந்ததனால், அவ்விருடியின் வருகையை அறிந்திடானாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அம்முனிவன் தன்னை அரசன் அலக்ஷ்யஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து, 'நீ யானைபோலச் செருக்குற்றிருந்ததனால் யானையாகக் கடவை' என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒருகாட்டில் யானையாகத் தோன்றினனாயினும், முன் செய்த விஷ்ணுபக்தியின் மகிமையால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந் தாமரைமலர்களைக் கொண்டு திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில் ஒருநாள் பெரியதொரு தாமரைத் தடாகத்தில் அருச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப்போய் இறங்கியபொழுது அங்கே (முன்பு நீர் நிலையில் நின்று தவஞ்செய்து கொண்டிருந்த தேவலனென்னும் முனிவனது காலைப்பற்றியிழுத்து அதனாற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற்) பெரிய முதலையாய்க் கிடந்த ஹூஹூ என்னுங் கந்தருவன் அவ்யானையின் காலைக் கௌவிக் கொள்ள, அதனை விடுவித்துக் கொள்ள முடியாமல் கஜேந்திரன் 'ஆதிமூலமே!' என்று கூவியழைக்க, உடனே திருமால் கருடாரூடனாய் அங்கு எழுந்தருளித் தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன்வாயினின்றும் விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருள் செய்தன னென்பதாம். சகலவிதத்தாலுங் காப்பாற்றவேண்டிய தந்தையால் மைந்தனுக்கும், ஒருவிலங்காலே மற்றொருவிலங்குக்கும் நேர்ந்த துன்பத்தைப் பொறாமல் அரைகுலையத் தலைகுலைய ஆங்காங்கு விரைந்து வந்து உதவின மகாகுணத்திலே ஈடுபட்டு இவ்வாறு கூறி |