(இ -ள்.) 'எம்பெருமான் - எமது தலைவனே! - மன்றில் - சபையிலே, அழைத்து - (துச்சாதனனால்) வருவித்து, எனக்கு -, மாசு அளித்த - (மானபங்கமாகிய) குற்றத்தை (ச்செய்து) தந்த, மன்னவன்பால் - துரியோதனராசனிடத்தில், சென்று - (இரந்து) போய், திறல் வீரர் - வலிமையையுடைய வீரர்களாகிய பாண்டவர்கள், தமக்கு ஐந்து ஊர் பெற்று - தங்கட்கு ஐந்து ஊர்களைப்பெற்று, இருந்தால் - வாழ்ந்திருந்தால்,-வல் வினையேன் - கொடிய தீவினையையுடைய வளாகிய யான், அன்று விரித்த அருங் கூந்தலை - (துகிலுரிந்த) அக்காலத்து விரித்திட்ட அருமையாகிய கூந்தலை, இனி என்று முடிப்பது - இனிமேல் எப்பொழுது முடித்திடுவது,' என்று - என்று சொல்லி, அழுதாள் - புலம்பினாள்; (எ - று.) அருங்கூந்தல் - இத்தன்மையதாய் அழகியதாக நீண்டுவளர்ந்த தொகுதியான கூந்தல் பிறர்க்கு இல்லை யென்றபடி; அல்லது, எல்லா அழகுகளினும் மயிர் முடியழகுசிறந்ததாக முதலில் எடுத்துக் கூறப்படுதலின், அதுபற்றி, 'அருங்கூந்தல்' என்றதாகவும் கொள்ளலாம். வெகுகாலமாகத்தான் பலவகைத் துன்பங்களை அனுபவித்ததற்குக் காரணமான தனது கொடிய வலிய ஊழ்வினையைத் தானே வெறுத்துக்கொண்டாள். பெருமான் - பெருமையையுடையவன்; ஈற்று 'மை' போன பெரு என்னும் பண்படி - பகுதி மான் - ஆண்பாற் பெயர்விகுதி; ஆன் - விகுதியென்றால், பண்புப்பெயர் ஈற்றைகாரம் மாத்திரங் கெட்டதென்க. இச்சொல், இங்கே, இயல்பாகிய அண்மை விளி. என்று என்ற வினா - இனி முடித்தலில்லையென எதிர்மறையோடு இரக்கத்தையும் உணர்த்தும். (105) 46.-சாத்தகி 'சமாதானங்கூடாது' என்றல். தண்டிருந்த திவன்கரத்திற்றனுவிருந்த தவன்கரத்தில் வண்டிருந்த பூங்குழன்மேன்மாசிருந்த தெனவிருந்தாள் கண்டிருந்தீ ரெல்லீருங்கருதலர்பா லூர்வேண்டி யுண்டிருந்து வாழ்வதற்கேயுரைக்கின்றீ ருரையீரே. |
(இ -ள்.) (திரௌபதியைச் சபையில் இழுத்துவந்து துகிலுரிந்த காலத்தில்), இவன் கரத்தில் - இந்த வீமசேனனது கையிலே, தண்டு இருந்தது- (சத்துருகாதினியென்னுஞ் சிறந்த) கதாயுதம் இருந்தது; அவன் கரத்தில் - அந்த அருச்சுனனது கையிலே, தனு இருந்தது - (காண்டீவமென்னுஞ் சிறந்த) வில் இருந்தது; (அங்ஙனமிருந்தும்), வண்டு இருந்த பூங்குழல் - வண்டுகள் இடைவிடாது மொய்த்திருத்தற்கு இடமான பூக்களை முடித்த கூந்தலை யுடையவளான திரௌபதி, மேல் மாசு இருந்தது என - தன் மேலே (மானபங்கமாகிய) பழிப்பு நிலைத்து நின்றதென்று (யாவரும்) சொல்லும்படி, இருந்தாள் - (அவமானமடைந்து) இருந்தாள்;(அந்நிலையை), எல்லீரும் - நீங்களெல்லோரும், கண்டு இருந்தீர் - (கண்ணெதிரிற்) பார்த்துக்கொண்டு (அப்பொழுது சும்மா) இருந்துவிட்டீர்கள்; (இப்பொழுதும்), கருதலர்பால் ஊர் வேண்டி உண்டு இருந்து வாழ்வதற்கே உரைக்கின்றீர் - மதியாத பகைவர்களிடத்தில் ஒவ்வொரு ஊரை |