இகழ்ச்சிகுறிப்பதாகவே கொள்ளுதல் தகுதி. மதியெனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. பண்டு என்றது - அரக்கு மாளிகையில் வைத்து எரிக்க நினைத்தது, வீமனைக்கழுவேற்றியது முதலிய அனைத்தையும் உட்படுத்தும். பண்டும், உம்மை - மாற்றப்பட்டது. (107) 48.- கண்ணன்திரௌபதியைநோக்கி ஒன்றுகூறத் தொடங்குதல். சாத்தகிநின் றிவையுரைப்பச்சடைக்குழலா ளழுதரற்றக் கோத்தருமன் முதலாய குலவேந்தரைவரையும் பார்த்தருளி யருள்பொழியும் பங்கயக்க ணெடுமாலும் ஏத்தரிய பெருங்கற்பினிளையாளுக் கிவை யுரைப்பான். |
(இ - ள்.) சாத்தகி - கண்ணன் தம்பி, நின்று - (உறுதியோடு) நின்று, இவைஉரைப்ப - இவ்வார்த்தைகளைச் சொல்லவும்,- சடை குழலாள் - (பின்னி முடிக்கப்படாமல்) சடையாகத்திரித்துவிடப்பட்ட கூந்தலையுடையவளான திரௌபதி, அழுது அரற்ற - புலம்பிக் கதறவும்,- (கேட்டு),-அருள்பொழியும் - கருணையைச் சொரிகின்ற, பங்கயம் கண் - தாமரைமலர்போலுங் கண்களையுடைய, நெடு மாலும். பெருமைக்குணமுள்ள கண்ணனும், கோ தருமன் முதல் ஆய குலம் வேந்தர் ஐவரையும் பார்த்தருளி - தலைவனான யுதிட்டிரனை முதலாக வுடைய சிறந்தகுலத்திற் பிறந்த அரசர்களைந்துபேரையும் [பஞ்சபாண்டவரையும்] கருணையோடுநோக்கி, ஏத்து அரிய பெருங் கற்பின் - (எவராலும்) துதித்தற்கு அருமையான சிறந்த பதிவிரதா தருமத்தையுடைய, இளையாளுக்கு - திருமகள்போன்றவளான திரௌபதிக்கு, இவை உரைப்பான் - இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ - று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க. யதுகுலத்தரசர்களில் வசுவேவனுக்கு உடன்பிறந்தமுறை யாகின்றவனும் சிநியென்பவனது மகனுமான சத்தியகனது குமாரனாகிய சாத்தியகி, பிராயத்திற் கண்ணனினும் இளையனாதலால் கண்ணனுக்குத் தம்பிமுறை யாவன். இலக்குமணன் இராமனிடத்துப்போல இவன் கண்ணனிடம் மிக்க அன்புகொண்டு அவன் கருத்துக்குச் சிறிதும் மாறுபடாது நடப்பவன். அன்றியும், இவன் அருச்சுனனிடம் வில்வித்தையைக் கற்றறிந்த மாணாக்கனாதலால், ஆசிரியனாகிய அருச்சுனனிடத்தும் அது காரணமாக மற்றைப் பாண்டவரிடத்தும் நீதிமுறைவழுவாமல் அன்போடு ஒழுகுபவன், இவனுக்கு யுயுதாநனென்றும், சைநேயனென்றும் இரு பெயர்களுண்டு. கோத்தருமன் - தருமக்கோ வெனமாற்றி, தருமராசனென்னலாம். அருள்பொழியுங்கண் - கருணைமிகுதி கண்ணில் விளங்கும் என்றபடி. திருப்பாற்கடல் கடைந்த காலத்து அதனினின்று முன்னர் மூதேவியும் பின்னர் ஸ்ரீதேவியும் பிறந்தனராதலால், இவர்கட்கு முறையே, மூத்தாள் இளையாள் என்றும், தமக்கை தங்கை |