என்றும்,முன்னவள் பின்னவள் என்றும் பெயர்கள் வழங்கும். இங்கே 'இளையாள்' என்றது - பாஞ்சாலிக்கு உவமையாகுபெயர். பங்கயக்கண்மால் - புண்டரீகாட்சன். (108) 49.-இதுமுதல் மூன்றுகவிகள் -கண்ணன் திரௌபதியைத் தேற்றுதல். தொல்லாண்மைப்பாண்டவர்க்குத் தூதுபோய் மீண்டதற்பின் நல்லாயுன் பைங்கூந்த னானேமுடிக்கின்றேன் எல்லாருங் காணவினி விரிப்பதெண்ணரிய புல்லார்த மந்தப்புர மாதர்பூங்குழலே. |
(இ - ள்.) நல்லாய் - நற்குண நற்செய்கைகளையும் அழகையும் உடையவளே!தொல் ஆண்மை பாண்டவர்க்கு தூதுபோய் மீண்டதன் பின் - பழமையான[இயற்கையாகவுள்ள] பராக்கிரமத்தையுடைய பாண்டவர்கட்காக (நான்துரியோதனனிடம்) தூதுசென்று திரும்பிவந்தபின்பு, உன் பைங்கூந்தல் நானேமுடிக்கின்றேன் - உனது கருமையான கூந்தலை நானே முடித்திடுகிறேன்;எல்லாரும் காண - அனைவரும் பார்க்கும்படி, இனி விரிப்பது - இனிமேல்விரிக்கப்படுவது,- எண் அரிய - கணக்கிடமுடியாத [அளவிறந்த], புல்லார்தம் -பகைவர்களான துரியோதனாதியருடைய, அந்தப்புரம் மாதர் -அந்தப்புரத்திலுள்ள மனைவியரான மகளிரது, பூ குழலே - மலர்களையணிந்தகூந்தல்களே; (எ - று.)
தருமபுத்திரனது கருத்தின்படி நான் பாண்டவதூதனாய்ச் சென்று வந்தவுடனேவிரைவில் துரியோதனாதியரைக் கொல்வித்து உன் சபதத்தைத் தவறாமல்நிறைவேற்றுவேனென்று திரௌபதிக்கு அபயமளித்தன னென்க, "அந்தகன்சிறுவ னரசர் தமரசற் கிளையவ னணியிழையைச் சென்று எந்தமக்குரிமை செய்யெனத் தரியா தெம்பெருமானருளென்னச், சந்தமல்குழலாளலக்க ணூற்றுவர்தம் பெண்டிருமெய்தி நூலிழப்ப, இந்திரன் சிறுவன்தேர் முன்நின்றான்," என்ற ஆழ்வாரருளிச்செயல் இங்கு நோக்கத்தக்கது. தரும புத்திரனது மிக்கபொறுமையை விளக்கத் தான் தூது போகக் கருதியதே யன்றி, கிருஷ்ணனுடைய மனப்பூர்வமான எண்ணம் போரை நடத்துவதிலேயே யென்பது, முன்னிரண்டடிகளில் வெளியாம். பின்னிரண்டடிகளிற்கூறியது, கொழுநர் இறந்தபின்பு மனைவியர் புரண்டு விழுந்து புலம்புகையிற் கூந்தலை விரித்தலை. 'அந்தப்புரமாதர்' என்றது, உள்ளிருந்த உன்னை அவன் சபையில் இழுத்து வந்ததற்குப் பிரதியாக அந்தப்புரத்திலுள்ள 'மகளிர் வெளிப்பட்டுப் போர்க்களத்தில் வந்து துன்புறுவர்' என்றற்கு: 'எல்லாருங் காண' என்றதும், இப்படிப்பட்ட கருத்தை விளக்கும். குழல் - சாதியொருமையாதலால், 'விரிப்பது' என்ற ஒன்றன்பாற் சொல்லைக் கொண்டது. உனது கூந்தலொன்றை விரித்ததற்கு எதிராக, அவர்களது கூந்தல் நூறு விரிக்கப்படும் என்றவாறு: இச்செய்யுளில் மாற்றுநிலையணி தோன்றுமாறு காண்க. |