நீலம்பசுமை கருமை இந்நிறங்களை வேறுபாடு கருதாது அபேதமாகக் கூறுதல் கவிமரபாதலால், 'பைங்கூந்தல்' எனப்பட்டது. இனி பசுமை - குளிர்ச்சியுமாம். 'பச்சைஜலம்' என்பதிற்போல. முடிப்பேன் என எதிர்காலமாகக் கூறவேண்டுமிடத்து, முடிக்கின்றேன் என நிகழ்காலத்தாற் கூறியது, விரைவும் தெளிவும் பற்றிய காலவழுவமைதி. புல்லார் - (தம்மைச்) சேராதவர்; எனவே, பகைவராம்; புல் என்ற வினைப்பகுதியடியாப் பிறந்த எதிர்மறைப் பலர்பால் வினையாலணையும் பெயர். இனி, புன்மையென்னும் பண்பினடியாப் பிறந்த குறிப்புப் பெயரெனக்கொண்டு, அற்பரான கௌரவரென்றுமாம். எண்ணரிய - நினைத்தற்குங் கூடாத இழிகுணமுடைய எனினுமாம். அந்தப்புரம் - அரண்மனையில் ராஜஸ்திரீகள் வசிக்குங் காப்புடைய உள்ளிடம். (109) 50. | மைக்குழலாய் கேளாய் மருவாருடற்புலத்துப் புக்குழலா குங்கொழுவாம்போர்வா ளபிமன்னுத் தொக்குழலும்வெங்கோன்மைத் தொல்வேந்தர் தங்குலமும் இக்குழலுஞ் சேர முடியாதிரானென்றான். |
(இ -ள்.) மை குழலாய் - கருநிறத்தையுடைய கூந்தலை யுடையவளே! கேளாய் - (யான்சொல்வதைக்) கேள்; மருவார் - பகைவர்களது, உடல் - உடம்பாகிய, புலத்து - விளைநிலத்திலே, புக்கு - நன்றாகப்பிரவேசித்து, உழல் ஆகும் - உழுதற்கு உரிய, கொழு ஆம் - இருப்புக்கொழுவாகிய, போர்வாள் - போரிற்சிறந்த வாளாயுதத்தையுடைய, அபிமன்னு - அபிமந்யுவானவன்,- தொக்கு உழலும் - ஒன்றாகக் கூடிச் சஞ்சரிக்கின்ற, வெங் கோன்மை தொல் வேந்தர்தம் குலமும் - கொடுங்கோன்மையையுடைய பழமையான அரசர்களது கூட்டத்தையும், இ குழலும் - இந்த உனது கூந்தலையும், சேர - ஒருசேர, முடியாது இரான் - முடிக்காமலிருக்கமாட்டான், என்றான் - என்று (கண்ணன்) கூறியருளினான்; (எ - று.) வேந்தர்குலத்தை அழியச்செய்து உனது கூந்தலையும் முடிக்கச் செய்வ னென்பதாம். முடியாது - இரட்டுறமொழிதலாக ஒருங்கே இரண்டு பொருள்பட்டது, சிலேடையணி. முடித்தல் - கெடுத்தலும், கட்டுதலுமாம். மைக்குழல் - உவமைத்தொகையாய், அஞ்சனம் போன்ற அல்லது மேகம்போன்ற கூந்தலென்றுமாம். மருவார் - சேராதவர்; மருவுதல் - சேர்தல். புலம் - கழனி. கொழு - காறு. உடற்புலத்து உழலாகுங் கொழுவாம் வாள் -உருவகம். ஆம் - உவமவுருபென்னலுமாம். "வாளுழவன்" என்றார்கம்பரும். அபிமன்னு - கண்ணனுடன்பிறந்தவளான சுபத்திரையினிடம்அருச்சுனனுக்குப் பிறந்த புத்திரன்: இளமையிலேயே வில்வித்தையில்ஒப்புயர்வின்றி மிகச் சிறந்தவன்: ஆனதுபற்றியே, மற்றையோர் விட்டாலும்பகைவர்களை இவன் விடானென இங்குக் கூறியது. (110) 51. | பெண்ணீர்மை குன்றாப்பெருந்திருவின் செங்கமலக் கண்ணீர் துடைத்திருதன்கண்ணிற் கருணையெனுந் |
|