பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 145

(வருணித்துச்) சொல்லுதற்கு அரிய செல்வத்தையுடைய வைசியர்களது பெரிய
கிருகங்களும், (உள்ளன); (எ - று.)

     வினைவருவிக்க. வீடு என்னும் ஒரு பொருளைத்தரும் ஆலயம்,
மாளிகை மனை, இடம் என்ற நான்கு சொற்கள், இக்கவியில் வந்தது -
பொருட்பின்வருநிலையணி.  'ஆசிலா' முதலிய அடைமொழிகளை அந்தணர்
முதலியோர்க்குக் கூட்டாமல், ஆலயம் முதலியவற்றோடு இயைப்பினும்
அமையும்.  பிராமணர் பூதேவராதலால், அவரது வீடு தேவகிருகத்துக்குரிய
'ஆலயம்' என்ற பெயராற் கூறப்பட்டது, அமைச்சர் அரசரது அருகிலிருந்து
அறிவு கூறுபவரென்று பொருள்படும்; 'உழையிருந்தார்,' 'உழையர்' என்பன
இப்பொருள்கொண்டவையே.  கடி - சிறப்பு, விளக்கம், காவல், மணம் முதலிய
பலபொருள்களைக் குறி்க்கும் உரிச்சொல்.  இப்பாட்டில், அடிதோறும் 'ஒருபால்'
என இறுதியில் ஒன்றி வந்தது - இயைபுத்தொடை; சொற்பொருட்
பின்வருநிலையணி.                                           (126)

67.- இது - அந்நகரத்துப்பலவகையொலிகளைக்
கூறுகின்றது.

மங்கலந்திகழ்மனையெலாம்வலம்புரியோசை
திங்கடோய்நெடுந்தலமெலாஞ்செழுஞ்சிலம்போசை
அங்கண்மாநகரனைத்துமும்முரசதிரோசை
எங்கணுங்கடவுளரிடந்தொறுமுழவோசை.

     (இ -ள்.) மங்கலம் திகழ் மனை எலாம் - சுபகாரியங்கள்
விளங்கப்பெற்ற வீடுகள்தோறும், வலம்புரி ஓசை - வலம்புரிச்சங்குகளின்
ஒலிகளும், - திங்கள் தோய் நெடுந் தலம் எலாம் - சந்திரனையளாவிய
உயர்ந்த உபரிகையிடங்களிலெல்லாம், செழுஞ் சிலம்பு ஓசை - (மாதர்கள்
காலிலணியும்) அழகிய சிலம்பென்னும் அணியின் ஒலிகளும்,- அம் கண்
மாநகர் அனைத்தும் - அழகிய இடத்தையுடைய பெரிய அந்நகரம்
முழுவதிலும், மும்முரசு அதிர் ஓசை - மூன்றுவகை முரச வாத்தியங்கள்
ஒலிக்கிற ஒலிகளும்,- எங்கணும் கடவுளர் இடந்தொறும் - எவ்விடத்துமுள்ள
தேவாலயங்களிலெல்லாம், முழ ஓசை - மத்தளங்களின் ஒலிகளும், (உள்ளன);
(எ - று.)

    இதற்கும் முடிக்குஞ்சொல் வருவிக்க, ஒவ்வோரிடத்தையும் வருணித்துக்
கூறும்போது ஆங்காங்குப் பலவகை யோசைகள் உள்ளன வெனக்கூறுதல்,
கவிமரபு.  இப்பாட்டில், ஒவ்வொரு அடியிலும் இறுதியில் ஓசையென வந்தது -
அணியிலக்கணத்தில் சொற்பொருட்பின் வருநிலையும், யாப்பிலக்கணத்தில்
இயைபுத்தொடையுமாம்.  மங்கலந்திகழ் என்பதற்கு - சாமரம் தீபம் முதலிய
மங்கலப் பொருள்கள் விளங்கப்பெற்ற என்றுங் கொள்ளலாம்.  மும்முரசு -
வெற்றிமுரசு, மங்கலமுரசு, கொடைமுரசு என்பன.  கடவுளர் - (இவ்வுலக
சம்பந்தத்தைக்) கடத்தலையுடையவர்.  முழ - முழா என்னுங் குறியதன் கீழ்
ஆ, குறுகிற்று.  மேல்மாடத்துக்கு 'சந்திரசாலை' என்று வடமொழியில்
ஒருபெயர் உள்ளதுபற்றி, 'திங்கள்தோய்' நெடுந்தலம்' என்றன ரென்னலாம்.
                                                          (127)