பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 151

மல்குமூவிருபத்துநூறாயிரமகிபர்
செல்வநாயகற்கியோசனையிரண்டெதிர்சென்றார்.

     (இ -ள்.) தொல் பகீரதி மைந்தனும் - பழமையாகிய கங்கா புத்திரனான
பீஷ்மனும், துரோணனும்-, சுதனும் - (அவனது) மகனான அசுவத்தாமனும்,
வில் விதூரனும் - வில்வித்தையில் வல்ல விதுரனும், கிருபனும்-, முதலிய -
முதலான, வேந்தர் - அரசர்களும், மல்கு மூவிருபத்து நூறாயிரம் மகிபர் -
(மற்றும்) நெருங்கிய அறுபது லட்சம் அரசர்களும், செல்வம் நாயகற்கு -
எல்லாச் செல்வங்களையுமுடைய தலைவனான கண்ணபிரானுக்கு, யோசனை
இரண்டு எதிர் சென்றார் - இரண்டுயோசனை தூரம் எதிர்கொண்டு
போனார்கள்;

    அக்காலத்தில் வாழ்ந்துள்ள குருகுலத்து அரசர்களுள் வீடுமன்
பெரியவனாதலின், 'தொல் பகீரதிமைந்தன்' எனப்பட்டான்.  இனி
தொன்மையைப் பகீரதிக்கு அடைமொழியாக்கி, (திரிவிக்கிரமாவதாரகாலம்
தொடங்கித்) தொன்றுதொட்டுள்ள கங்கையென்றுங்கொள்ளலாம்.  பகீரதி -
பாகீரதியென்னும் தத்திதாந்தநாமத்தின் குறுக்கல்; (சூரியகுலத்தரசனாகிய)
பகீரதனாற் கொணரப்பட்டதென்று பொருள்பெறும்.  ('சகரர்தம்பொருட்
டருந்தவம் பெரும் பகல் தள்ளிப், பகிரதன் கொணர்ந்திடுதலாற் பகிரதியாகி"
என்றார் கம்பரும்.)

    துரோணர் - துரோணகும்பத்தினின்று தோன்றியவர்; பரத்துவாச
முனிவரது குமாரர்; கிருபாசாரியருடன் பிறந்தவளான கிருபியின் கணவர்;
அசுவத்தாமனது தந்தை; சகல சாஸ்திரங்களையும் தம் பிதாவினிடங் கற்றுப்
படைத்தொழிலைப் பரசுராமரிடத்து ஏழுநாளிற் பயின்றவர்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் அஸ்திரசஸ்திரங்களைக் கற்பித்த
ஆசிரியர்.  விதூரன் - விதுரனென்பதன் நீட்டல்.  'வெற்றி விதுரன்கை
வில்லிருக்க மேதினியின், மற்றவனை வெற்றிகொள்ளு மாறுண்டோ"
என்னும்படி விதுரன் வில்வித்தையிற் சிறந்தவனாதலால், 'வில்விதூரன்'
என்றார்.  கிருபர் - கௌதம முனிவரது பௌத்திரர்; சரத்வாந் என்ற
முனிவரது குமாரர்; துரோணர் மனைவியான கிருபிக்கு உடன்பிறந்தவர்;
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் முதல் வில்லாசிரியர்; நாணற் காட்டிற்
பிறந்த இவரை, அங்கு வேட்டையாடவந்த சந்தனுமகாராசன்கண்டு
கிருபையினால் எடுத்து வளர்த்தமைபற்றி, இவர்க்கு இப்பெயர் வந்தது.

    முதலிரண்டடியிற் கூறியவருள், வீடுமனும் விதுரனும் ஒழிந்த மூவரும்
அந்தணராயினும், அவர்களை 'வேந்தர்' என்றது, அவர்கள் வீடுமன்
திருதராட்டிரன் விதுரன் என்பவரது கருத்தின்படி அரசர்க்கு உரிய குடை
கொடி முதலிய இராஜ சின்னங்களைப்பெற்று வாழ்ந்ததனால்; (கீழ்,
வாரணாவதச் சருக்கத்தில் "முனி நீ யையா விதற்குமுன்ன மின்றுமுதலா, வினி
யிவ்வுலகுக்கரசா யெம்மிலொருவனாகிக், குனிவில்வலியா லமருங்கோடியென்று
கொடுத்தான், பனிவெண்குடையு நிருபர்க்குரிய வரிசை பலவும்" என்றது
கொண்டு