பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 153

யையும்,விதுரனுக்குத் துரியோதனனிடத்தில் வெறுப்பையும் உண்டாக்குவதை
மேலே காண்க.

     முதலடி- முற்றுமோனை.  வந்துவந்து - அடுக்கு, மிகுதிப் பொருளது.
பரமன் - தனக்குமிக்காரை யில்லாதவனென்றும், சிறந்த
இலக்குமியையுடையவனென்றும் பொருள்படும்.  கண்மலர் = மலர்க்கண்;
முன்பின்னாகத் தொக்க உவமைத்தொகை.  கண்ணன் உட்புகுதற்கேற்ற
பாக்கியத்தைப் பெற்றதனால், 'வாழ்வளமனை' எனப்பட்டது.     (135)

76.-கண்ணன் விதுரன்மாளிகையிலே சிங்காதனத்தில்
வீற்றிருத்தல்.

வேந்தர்யாரையும்விடைகொடுத்தகன்றபின்விமலன்
வாய்ந்தமாளிகைநடுவணோர்மண்டபங்குறுகி
ஆய்ந்துவல்லவர்நவமணியழுத்தியவரியே
றேந்துமாசனமிடப்பொலிந்ததன்மிசையிருந்தான்.

     (இ -ள்.) வேந்தர் யாரையும் - (எதிர்கொண்ட) அரசரெல்லா ரையும்,
விடை கொடுத்து - (இன்சொற் சொல்லிச்) செலவு கொடுத்தனுப்பிவிட்டு,-
அகன்றபின் - (அவர்கள்) நீங்கினபின்பு,- விமலன் - குற்றமற்ற பரிசுத்த
மூர்த்தியான கண்ணன்,- வாய்ந்த மாளிகை நடுவண் - பொருந்திய (விதுரனது)
கிருகத்தின் நடுவிலுள்ள, ஓர் மண்டபம் - ஒரு மண்டபத்தை, குறுகி -
அடைந்து,- ஆய்ந்து வல்லவர் நவ மணி அழுத்திய - (சிற்ப நூல்களை)
ஆராய்ந்து வல்லவர்களால் நவரத்தினங்களையும் பதித்துச் செய்யப்பட்ட, அரி
ஏறு ஏந்தும் ஆசனம் - ஆண்சிங்கந் தாங்குவது போலமைந்த
ஆசனமொன்றை, இட - (விதுரன் கொண்டுவந்து) சமர்ப்பிக்க, அதன் மிசை
பொலிந்து இருந்தான் - அத்திவ்விய சிங்காதனத்தின்மீது  விளக்கமாக
எழுந்தருளியிருந்தான்; (எ  -று.)                             (136)

77.-விதுரன்கண்ணபிரானைவணங்கி உஜ்ஜீவித்தல்.

இருந்துவந்தருளிறைவனையிறைஞ்சினானிறைஞ்சிப்
பெருந்துவந்தனைப்பிறப்பையுமிறப்பையும்பிரித்தான்  
மருந்துவந்தனையமரருக்கருளியமாயோன்
விருந்துவந்தனனென்றுளமுருகியவிதுரன்.

     (இ -ள்.) 'வந்தனை அமரருக்கு - (தன்னை) வணங்குதலைச் செய்த
தேவர்கட்கு, மருந்து - (திருப்பாற்கடலினின்று உண்டான) அமிருதத்தை,
அருளிய - பகிர்ந்துகொடுத்தருளிய, மாயோன் - ஆச்சரியசக்தியுள்ளவனான
திருமால், விருந்துவந்தனன் - (எனதுகுடிசைக்கு) விருந்தினனாக
எழுந்தருளினான்,' என்று - என்று கருதி, உளம் உருகிய - (மிக்ககளிப்பால்)
மனங்கரைந்த, விதுரன் -,- இருந்து உவந்தருள் இறைவனை - (சிங்காதனத்தில்)
வீற்றிருந்து திருவுள்ளமுகந்தருளுகிற கண்ணபிரானை, இறைஞ்சினான் -
வணங்கினான்; இறைஞ்சி - (அங்ஙனம்) வணங்கி, (அம்மாத்திரத்தால்),