பெருந்துவந்தனை பிறப்பையும் இறப்பையும் பிரித்தான் - பெரிய இருவகை வினைகளையும் (அவற்றின்காரியமான) ஜனனத்தையும் மரணத்தையும் ஒழித்தவனானான்; (எ - று.) என்றது, இனிப்பிறப்பின்றி முத்திபெறும்படி எல்லாக்கருமங்களையும் எம்பிரானருளால் ஒழித்தானென்பதாம். 'பிறப்பையும் இறப்பையும் பிரித்தான்' என்றது, அவற்றிற்குக் காரணமான கருமமொழிந்ததை; இது - உபசாரவழக்கு. இம்மையிலே கருமமொழிந்து நின்றவன், ஜீவந்முக்தனெனப்படுவன். த்வந்த்வம் என்றது துவந்தன் என விகாரப்பட்டது; இரண்டாக இருப்பதெனப் பொருள்படும் இச்சொல் இங்கு அங்ஙனமுள்ள புண்ணியபாவங்களை யுணர்த்திற்று. இருவினைகளைத் துவந்தனென உயர்திணையாண்பாலாற் கூறியது, செறலினாலாகிய திணைவழுவமைதியாலும், இச்சொல் வடமொழியில் ஒருமையாயிருப்ப தானாலுமென அறிக. நல்வினையும் பிறப்பிற்குக் காரணமாதலால், இங்கு இருவினையையும் அடக்கி, 'துவந்தனை' என்றார். அவை - சஞ்சிதம், ஆகாமியம், பிராரப்தம் என்று மூன்றுவகைப்படும்; பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்டுள்ள வினைகள் - சஞ்சிதம்; அவற்றுள் இறந்த உடம்புகளால் அனுபவித்தன ஒழியப் பிறந்த வுடம்பால் அனுபவிக்கக்கடவனவாய் நின்றவை - பிராரப்தம்; ஆகாமியம் - இனி அநுபவிக்கக்கடவனவாய் எஞ்சி நின்றவை; அவற்றுள், இச்செய்யுளால் சஞ்சிதமும் ஆகாமியமும் ஒழிந்தமை கூறினார். இனி, துவந்தனை என்பதற்கு - அலைவுக்கு இடமான என்றும்; (காரணகாரியத் தொடர்ச்சியாய் ஒன்றோடொன்று கூடிஇணைபட்ட என்றும் உரைக்கலாம். தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்த காலத்தில், திருமால் தான் இரண்டுவடிவங்கொண்டு அவர்கள் பக்கல் நின்று இழுத்துக் கடைந்ததும், கடைகையில் தந்வந்திரியென்னும் வடிவத்தோடு அமிருதகலசத்தைக் கையிலேந்தி அக்கடலினின்று எழுந்ததும், மோகினிவடிவங்கொண்டு அசுரர்களை வஞ்சித்து அமுதத்தைக் கைக்கொண்டு தேவர்கட்கு அமரராம்படி பிரசாதித்ததும் ஆகிய எல்லாம் அடங்க, 'மருந்துவந்தனை யமரருக்கு அருளிய மாயோன்' என்றார். துருவாசமுனி சாபத்தாற் செல்வங்களை யெல்லாம் இழந்த தேவர்கள் திருமாலைச் சரணமடைந்து நமஸ்கரித்துப் பிரார்த்தித்ததுபற்றி, 'வந்தனையமரருக்கு' என்றது. இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி காண்க. (137) 78.-இதுவும் அது. கோடுகொண்டகைக்குரிசிலையலர்ந்தகோகனதக் காடுகண்டெனக்கண்டுதன்கண்ணிணைகளியாத் தோடுகொண்டதார்விதுரனிப்பிறப்பையுந்தொலைத்தான் வீடுகண்டவர்க்கியம்பவும்வேண்டுமோவேண்டா. |
(இ -ள்.) தோடு கொண்ட தார் விதுரன் - பூவிதழ்களைக் கொண்ட மாலையையுடைய விதுரன்,- கோடு கொண்ட கை குரி |