'தந்தவண்ணன்' எனப்பட்டான். திருமாலுக்குச் சூரியன் வலத்திருக்கண்ணும் சந்திரன் இடத்திருக்கண்ணுமாதலின், 'ஒளி தங்குகண்' என்றார். பலகடன் - சந்தியாவந்தனம் முதலிய நித்திய வைதிகச் சடங்குகள். வேய் - மூங்கிலினாலாகிய குழலுக்குக் கருவியாகுபெயர். இசைப்பது, இசை. இசைத்தல் - பாடுதல். வந்த - பிறந்த; கூடவந்த வென்றன்று. (165) 106.-வீடுமன் முதலியோர்எதிர்கொண்டு சென்று வணங்க, கண்ணபிரான் சபையிற் சென்று ஆசனத்தில் இருத்தல். துன்னுகங்கைமகனுந் துரோணனொடு சுதனுநீதிபுனைவிதுரனும் மன்னர்மன்னனை யொழிந்தமன்னவரும் வந்துசேவடிவணங்கினார் கன்னனுந்தலைகவிழ்ந்திருந்தனனழன்றுளஞ்சகுனிகருகினான் முன்னநின்றவர்களிட்டபீடமிசை மொய்துழாய்முகிலுமெய்தினான். |
(இ -ள்.) (அப்பொழுது), - துன்னு - (அங்கே) பொருந்தியிருந்த, கங்கைமகனும் - வீடுமனும், துரோணனொடு சுதனும் - துரோணாசாரியனும் அவன் மகனான அசுவத்தாமனும், நீதி புனை விதுரனும் - நியாயத்தையே (தனக்கு ஆபரணமாகக்) கொண்ட விதுரனும், மன்னர் மன்னனை ஒழிந்த மன்னவரும் - துரியோதனனை யொழிந்த மற்றையரசர்களெல்லோரும், வந்து சே அடி வணங்கினார் - அருகில் வந்து சிவந்த (கண்ணனது) திருவடிகளை வணங்கினார்கள்; கன்னனும் - கர்ணனோவெனில், தலை கவிழ்ந்து இருந்தனன்- (ஒன்றுந் தோன்றாது) தலையிறங்கி உட்கார்ந்திருந்தான்; சகுனி - சகுனியோ,அழன்று உளம் கருகினான் - (தமது ஏற்பாட்டின்படியன்றி எல்லோரும்கண்ணனைக் கௌரவித்ததைப்பார்த்துப் பொறாது) மனம்கொதித்துவெதும்பினான்; (அங்ஙனமிருக்க),- மொய் துழாய் முகிலும் - நெருங்கினதிருத்துழாய் மாலையையுடைய காளமேகம் போன்ற கண்ணனும், முன்னம்நின்றவர்கள் இட்டபீடம் மிசை எய்தினான் - முன்னிடத்துநின்றவர்கள்கொண்டுவந்து சமர்ப்பித்த ஆசனத்தின்மீது எழுந்தருளியிருந்தான்;(எ-று.)
இப்பாட்டில் விதுரனுக்குக்கொடுத்த அடைமொழியைக் கவனிக்க. துரியோதனனது கருத்துக்கு மாறுபாடாக எழுந்து உபசரிக்கவும், தன் மனச்சாட்சிக்கு மாறுபாடாக எழுந்துஉபசரியாதிருக்கவும் மாட்டாது, கன்னன் தலை கவிழ்ந்திருந்தான்; அன்றிக்கே, தனது உயிர்த்தோழனது கட்டளை சிறிதும் பயன்படாததை நோக்கி நாணித்தலைகவிழ்ந்தா னென்றுங்கொள்க. கண்ணனைக் கண்டமாத்திரத்தில் யாவரும் தம் வசமின்றிப் பரவசப்பட்டு எழுந்து விட்டதனால், துரியோதனனது கட்டளை சிறிதுஞ்செல்லாது பறந்தது. விநாசகாலம் சமீபித்ததனால் ஊழ்வினைபற்றித் துரியோதனன் முதலிய சிலர் மனம் நெகிழவில்லை. நின்றவர்கள் என்ற பன்மை - ஒருவர் முன் ஒருவராய்ப் பலர் விரைந்து ஓடிவந்து அன்போடு பீடமிடலுற்றன ரென்பதை விளக்கும். துரியோதனனது அக்கிரமங்களுக்கெல்லாம் சகுனி மூலமாதலால், அவன் அழன்று உளங்கருகினான். சகுனி உளங்கருகினான் - சினைவினை முதல் கொண்டது. |