பக்கம் எண் :

18பாரதம்உத்தியோக பருவம்

இங்கு) எழுந்தருளியகாரணத்தைச் சொல்லியருள்வாயாக என்று வேண்ட,
முனிவனும் - அவ்வுலூகனும்,- அந்தன் ஆகிய - பிறவிக் குருடனான, கந்து
அடர் கடம் களிறு அரசனும் - கட்டுத்தறியை முறிக்கின்ற மதம்பொழிகிற
யானைச்சேனையையுடைய திருதராட்டிரனும், அவன் தந்த மைந்தர் யாவரும் -
அவன்பெற்ற (துரியோதனன் முதலிய) புத்திரரெல்லோரும், கன்னனும் -
கர்ணனும் சகுனியும்-, (என்னும் இவர்கள்), மனம் கனன்றிட -
மனங்கொதிக்கும்படி, வரன்முறை - (தான்) வந்த வரலாற்றை, அடைவு ஆக -
முறைமைப்படி, சொல்வான் - சொல்பவனானான்; (எ - று.)-அதனை, மேல்
மூன்றுகவிகளிற் காண்க.

     தோளுக்குமலை உவமை பருமைக்கும், வலிமைக்கும், ஆயுதங்களால்
அழிவடையாமைக்கு மென்க.  இங்கே பிறமலைகளை யெடுத்துக் கூறாமல்
விந்தியமலையை யெடுத்துக்கூறினது, அது முன்னொருகாலத்தில்
மலையரசனான இமவானோடு மாறுபட்டுத் தான் எல்லா மலைகளினும்
மேலாகுமாறு வானத்தில் சூரியசந்திரரது கதியையும் தடுத்து உயர்ந்து
சென்றதாதலின், அவ்வயுர்வைக்கருதியென்க.  முதலியோர் என்றது - விதுரன்,
துரோணன், கிருபன் ஆகியவரை. கந்து - மரக்கிளை; இலக்கணையாய், யானை
கட்டுந்தறியை யுணர்த்தும், மதயானை கட்டுத்தறியை முறிக்குந் தன்மையது.
கடம் - கன்னம்; இது அதனினின்றுவழியும் மத நீருக்கு இடவாகுபெயர்.
இங்கே களிறு என்றது, தேர் குதிரை காலாள் என்னும் மற்றையங்கங்களுக்கும்
உபலக்ஷணம்.  அழகியதும் பெரியதுமாய் மதத்தாற் கதஞ்சிறந்து
தானும்போர்செய்யும் யானை மற்றைத் தேர்முதலியவற்றினுஞ் சிறந்ததென்ற
கருத்தால், இங்கு அதனையே பிரதானமாகக் கூறினார்.  "குஞ்சர நகரத்து"
அரசனென்பதுதோன்ற, களிற்றரசனென்றா ரெனினுமமையும்.   இனி, யானை
போன்ற அரசனென்றுமாம்;  வலிமை கம்பீரத்தன்மை, நடை, நோக்கம்,
கோபத்தைமறைத்தற்குரியகாலத்தில் மறைத்துவைத்து
வெளிப்படுத்தற்குரியகாலத்தில் வெளிப்படுத்தல் என்பனவற்றில் வீரனுக்கு
யானை உவமை.  "கராசலம்பதினாயிரம் பெறுவலிக்காயமொன்றினிற்
பொற்றோள், இராசகுஞ்சரம்பிறந்திடும் விழிப்பலனில்லை மற்றதற்கென்றான்"
என முன் வியாசர் கூறியபடி இவன் பதினாயிரம் யானைபலங்கொண்டவன்
என்பது தோன்ற, களிற்றரசனென்றா ரென்றலும் பொருந்தும்.  சகுனி -
காந்தாரதேசத்தரசன்; திருதராஷ்டிரன் மனைவியான காந்தாரியுடன்
பிறந்தவனாதலால், துரியோதனாதியர்க்கு மாமன்; சுபலனென்னும் அரசனது
புத்திரன்.  இராச்சியபாகங் கேட்கும் வார்த்தையாதலால், இவர்கள்
மனங்கனல்வதாயிற்று.  'அந்தனாகிய அரசனாகிய அவன் தந்த
மைந்தர்யாவரும்' என்ற சொற்போக்கு - தந்தை ஊனக்கண்குருடன் மைந்தர்
ஞானக்கண்குருடர் என்ற இழிவைத் தொனிப்பிக்கும்.  இவர்கள்
மனங்கனன்றிடச் சொல்வான் என்றதனால், உலூகன்சொல்லும் வார்த்தை
இவரொழிந்த மற்றையோர்க்கெல்லாம் சம்மதமென்பது பெறப்பட்டது.