செயாத், தூதனாகிவருதன்மைசொல்லுகென மன்னர் மன்னனிது சொன்னபின், வேதநாறுமல ருந்திவண்டுளப விரைசெய் தாரவனு முரைசெய்வான். |
(இ -ள்.) சீதம் - குளிர்ச்சியான, நாள் - புதிய, மலர் - தாமரைப்பூவில் வாழ்கின்ற, மடந்தை - சிறந்தமகளான இலக்குமிக்கு, கேள்வன் - கணவனான கண்ணபிரான், இவை - இவ்வார்த்தைகளை, தெரிய செப்பவும் - விளக்கமாகச் சொன்னவளவிலே,- மன்னர் மன்னன் - துரியோதனன், ஒப்புஇலா நாத நாயகன் முகத்தில் வைத்த இரு நயனன் ஆகி - (தனக்கு) உவமை பெறாத தலைமைத்தேவர்களுக்குந் தலைவனாகிய அக்கண்ணனது முகத்திற்செலுத்தின இரண்டுகண்களை யுமுடையவனாய், மிகநகை செயா - (இகழ்ச்சிதோன்ற) மிகுதியாகச் சிரித்தல்செய்து, தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என - 'நீ தூதனாய்வந்த தன்மையைச் சொல்வாயாக' என்று, இது சொன்ன பின் - இவ்வார்த்தையைச் சொன்னபின்பு, வேதம் நாறும் மலர் உந்தி வள் துளபம் விரைசெய் தாரவனும் - வேதங்கள் பரிமளிக்கிற திருநாபித்தாமரை மலரையும் அழகிய திருத்துழாயினாலாகிய வாசனையைச் செய்கின்ற மாலையையும் உடைய கண்ணபிரான், உரைசெய்வான் - சொல்லுபவனானான்; (எ - று.) - அதனை, மேலிரண்டு கவிகளிற் காண்க. திருமாலின் உந்திக்கமல மலரில் எப்பொழுதும் பிரமன் வேதத்தை ஓதிக்கொண்டிருத்தலால், 'வேதநாறு மலருந்தி' என்றார். வேதம் நாறும் - வேதம் ஒலிக்கும். ஒரு புலன் மற்றொரு புலனாக உபசரிக்கப்பட்டது: இனி 'வேதனாறும் என்ற பாடத்துக்கு, வேதன் - பிரமன், நாறும் - தோன்றுமென்க. நாறு என்னும் பகுதி இவ்விரு பொருளு முடையதாதலை, நாற்றம், நாற்று என்றசொற்களிற் காண்க. மடந்தை - இங்கே பருவப்பெயராகாமல் பெண்ணென்றமாத்திரமாய் நின்றது; அப்பருவத்திற்கு வயதெல்லை - பதினான்கு முதல்பத்தொன்பது அளவுமாம். கேண்மையையுடையவன், கேள்வன்; கேண்மை -நண்பும், உறவும், அன்பும். நாதநாயகன் - நாதர் நாயகன் எனப்பிரித்துப்புணர்க்க; "சிலவிகாரமா முயர்திணை". வேதம் என்ற வடசொல்லுக்கு -(நன்மை தீமைகளைத்) தெரிவிப்பதென்று பொருள்; அறிவித்தலென்னும்பொருளுள்ள 'வித்' என்ற வினையடியினின்று பிறந்தது. (170) 111.-இதுவும், அடுத்தகவியும்- பாண்டவர்க்கு நாடுகொடுக்கும்படி கண்ணபிரான் துரியோதனனுக்குக் கூறுதல். சூதினாலரசிழந்துநின்றுணைவர் சொன்னசொல்லும்வழுவாதுபோய் ஏதிலார்களெனநொந்து தண்ணிழலிலாதகானினிடையெய்தியுந் தீதிலாவகை குறித்தநாள்பல கழித்துவந்தனர் செகத்தினிற் கோதிலாதகுருகுலமகீபவவருரிமைநண்பொடுகொடுத்தியே. |
|