பக்கம் எண் :

2பாரதம்உத்தியோக பருவம்

ஆகியும் - (இராவணன்முதலிய) இராக்கதர்களை வதைத்தல் செய்தருளின
முத்தியுலகத்துக்குத் தலைவனான ஸ்ரீராமவடிவமாயும், நின்ற-
(திருவவதாரஞ்செய்து) நின்ற, மால் - திருமாலாகிய கண்ணபிரானது, மலர் அடி
- தாமரைமலர்போன்ற திருவடிகளை, மறவேன்- (எப்பொழுதும்)
மறக்கமாட்டேன்; (எ - று.) - ஏ-தேற்றம்; ஈற்றசையெனினும் அமையும்.

    "தேவுடைய மீனமா  யாமையா யேனமா யரியாய்க் குறளாய் மூவுருவி
லிராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்" "மச்சா கூர், மா கோலா
சிங்கா வாமா ராமா ரா, மா கோபாலா மாவாவாய்" என்றபடி மத்ஸயம்,
கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், தசரதராமன், பலராமன்,
கிருஷ்ணன், கல்கி என்ற திருமாலின் பத்துத் திருவவதாரங்களுள்,
கிருஷ்ணாவதாரமூர்த்தி  இந்நூலின் வரலாறு நிகழ்ந்த காலத்தில்
எழுந்தருளியுள்ளதனால் அவரை 'நின்றமால்' என விசேடிய முகத்தாற்கூறி,
பலராமாவதாரம் கிருஷ்ணாவதாரத்தில் ஐக்கியமாதலாலும் கற்கியவதாரம் இனி
நிகழ்வதாதலாலும், அவ்விரண்டையும் நீக்கி, மற்றை யேழு நிகழ்ந்த
திருவவதாரங்களையே இங்கு முறைப்படக் கூறினார்.

    முன்னொருகாலத்தில் பிரமதேவன் கண்துயில்கையில், சோமகனென்னும்
அசுரன் வேதங்களையெல்லாங்கவர்ந்துகொண்டு கடலினுள் மறைந்து செல்ல,
பிரமன்முதலிய தேவர்களின் வேண்டுகோளால் திருமால் மத்ஸ்யமாகத்
திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக்கொன்று,
அவன் கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து, அன்னவடிவமாய்
அவற்றைப் பிரமனுக்கு உபதேசித்தருளினர்.  துருவாசமுனிவரது சாபத்தாற்
கடலினுட்புக்கு ஒளித்த சுவர்க்கலோகத்துச் செல்வங்களையெல்லாம் மீளவும்
பெறும்பொருட்டு இந்திரன் முதலிய தேவர்கள் திருமாலின் நியமனப்படி
அசுரர்களுடன் கூடிச்சென்று மந்தர மலையை மத்தாக நாட்டி வாசுகி
யென்னும் பெரும்பாம்பைக் கடைகயிறாகப் பூட்டித் திருப்பாற்கடலைக்
கடைந்தபொழுது, அம்மந்தரகிரி கடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி
எம்பெருமான் மகாகூர்ம ரூபத்தைத்தரித்து அதற்கு ஆதாரமாக
எழுந்தருளியிருந்தார்: அன்றியும், உலகங்களின் கீழ் நின்று அவற்றை
எப்பொழுதுந் தாங்கியருளும் ஆதிகூர்மமூர்த்தியும் உண்டு. ஒரு காலத்தில்
பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிப்போன
இரணியாக்கனைத் திருமால் தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால்
மகாவராகரூபமாகத் திருவவதரித்துக்கொன்று பூமியைக்
கோட்டாற்குத்தியெடுத்துக் கொண்டுவந்து  பழையபடி விரித்தருளினர்.
எல்லாமலைகளிலும் பெரிய மகாமேருகிரி சிலம்பினிடத்துச் சிறிய பருக்கைக்
கற்போலத் தன்குளம்பினிடத்து மிகச் சிறுபொருளாகுமாறு கொண்ட பெரிய
பன்றித்திருவடிவமாதலால், 'மேருவையெடுக்குந் தாளேனம்' என்றது;
"சிலம்பினிடைச் சிறுபரல்போற் பெரியமேரு திருக்குளம்பிற் கணகணப்பத்
திருவாகாரங், குலுங்க நிலமடந்தைதனை யிடந்துபுல்கிக்கோட்டிடை
வைத்தருளிய