எரிபட்டமன்மதனது அங்கம் (உடல்) விழுந்த இடமாதலால், அங்கதேசமென்று பெயர்; "வாரணத்துரிவையான் மதனனைச் சினவுநாளீரமற்றங்கமிங்குகுதலாலிவணெலாம், ஆரணத்துறையுளா யங்க நாடு" என்ற கம்பராமாயணத்தாலும் அறிக. பதாதி - காலாட்படை; மற்றைச் சேனைகட்கு உபலட்சணம்; 'எடுத்தமொழி யினஞ் செப்பலு முரித்தே'. முற்று எழும் என எடுத்து - முழுவதும் எழும் என்றுமாம். துரியோதனனை 'நாசமுறுபேரன்' என்றதனால், - பாண்டவர் 'நாசமறுபேரர்' எனத்தொனிக்கும். கர்ணனது வில்லுக்குக் காலபிருஷ்டமென்றும், விஜயமென்றும் பெயர். "மேகவாகனன் பாற்பெற்ற வெயிலவனியமத்தங்கி, யாகியமுனிவற் கீந்தவரும் பெருஞ்சாபம் பெற்றேன்" என மேற் கன்னபருவத்திற் கூறுவதனாலும் இதன் மகிமையை உணர்க. (194) 135. | நீயிருக்கநெடுவிற்கை யாசிரியனவனிருக்க நிகரற்றவன், சேயிருக்கவிறன் மன்னரிப்படி திரண்டிருக்க வெதிர்சென்று நீள், வேயிருக்குமிதழிடையனுக்கு நல்விருந்துசெய்தவன் வெறுக்கிலென், போயிருக்கிலென் முறிக்கிலென்சிலைமலைந்து நம்மொடெவர்போர் செய்வார். |
(இ -ள்.) நீ இருக்க - (நமது பக்கத்தில் வீடுமனாகிய) நீ இருக்க, - நெடுவில் கை ஆசிரியன் அவன் இருக்க - நீண்ட வில்லேந்திய கையையுடைய ஆசாரியனாகிய அத்துரோணன்இருக்க, - அவன்சேய் நிகர் அற்று இருக்க - அவனது குமாரனான அசுவத்தாமன் ஒப்பில்லாமல் இருக்க, -விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க - வெற்றியையுடைய அரசர்கள் பலர்இவ்வாறு கூடியிருக்க, நீள் வேய் இருக்கும் இதழ் இடையனுக்கு எதிர் சென்றுநல்விருந்து செய்தவன் வெறுக்கில் என் - நீண்ட புல்லாங்குழல் பொருந்தினஅதரத்தையுடைய இடைச்சாதியனான கிருஷ்ணனுக்கு எதிர்கொண்டு போய்ச்சிறந்த விருந்துபசாரஞ் செய்த விதுரனொருவன் வெறுத்தால் என்ன? போய்இருக்கில் என் - (தனியே) போய் இருந்தால் என்ன? சிலை முறிக்கில் என் -வில்லை முறித்துப் போகட்டுவிட்டால் என்ன? நம்மொடு மலைந்து எவர் போர்செய்வார் - நம்மோடு எதிர்த்துப் போர்செய்ய வல்லவர் யாவருளர்?[எவருமில்லை யென்றபடி];
விதுரன் - கோபித்துப் போனதனால் நமது துணைவலிக்கு யாதொரு குறைவுமில்லை யெனத் துரியோதனன் செருக்கிக்கூறியவாறு: கிருபாசாரியன் பிராயத்தில் முதிர்ந்தவனாய் மூப்படைந்தமைபற்றி, அவனை அப்பிரதானமாகக்கூறாதுவிட்டது; இக்கருத்து, கீழ் வாரணாவதச் சருக்கத்தில் "பரிவுடனிவன்படைபயிற்றப் பின்னருங், குருபதி வேறொரு குருவைத் தேடினா, னிருளறமதிநில வெறித்ததாயினும், பரிதியை நயக்குமிப்பரவை ஞாலமே" என்றதுகொண்டும் விளங்கும். இனி, 'ஆசிரியரவர்' எனப் பாடங்கொண்டு,கிருபனையும் அடக்குதலும் ஒன்று. சிவபிரானருளாற் பிறந்த சிறப்புப்பற்றி,அசுவத்தாமனை 'நிகரற்று' என விசேடித்தது. நிகரற்றவன் சேய் என எடுத்து- நிகரற்ற துரோணனது சேய் என்றும், |