(இ -ள்.) மண்ணின்மேல் வாழும் மாந்தர் - பூமியில் வாழ்ந்திருக்கும் மனிதர் சிலர்,- செல்வம் வந்து உற்றகாலை - (தமக்குப்) பொருள் வந்து சேர்ந்த காலத்து, தெய்வமும் சிறிது பேணார் - (அது தன்பக்கல் வருதற்குக் காரணமாகத் திருவருள்புரிந்த) கடவுளையும் சிறிதும் விரும்பிக்கொண்டாடார்; சொல்வன அறிந்து சொல்லார் - (தாம்) சொல்லும்வார்த்தைகளை (ஆராய்ந்து)உணர்ந்து சொல்லமாட்டார்கள்; சுற்றமும் துணையும் நோக்கார்- உறவினரென்றும் நண்பரென்றும் தாட்சிணியம் பார்க்கமாட்டார்கள்; வெல்வதேநினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார் - (தாம்)சயித்திடுவோம் என்பதையே கருதுவதல்லாமல் கொடிய பகைவருக்கம் (தம்மினும்) வலிமையுடையதென்று மதிக்கமாட்டார்கள்; வல் வினை விளைவும் ஓரார் - (எல்லாவற்றினும்) வலிமையுடைய ஊழ்வினையின் பயனையும் ஆராயமாட்டார்கள்; (எ - று.) - இது என்ன பேதைமை? என்றபடி.
அற்பகுணமுடையவனான துரியோதனன் தனக்குச் செல்வமிருத்தலால் இங்குக் குறித்த துர்க்குணங்களையெல்லாம் மிகக் கொண்டுள்ளானென்றற்கு, பொதுவாக இதுகூறினார். பேணப்படுவன யாவற்றுள்ளும் தலைமை கருதி, தெய்வத்தை உயர்வுசிறப்பும்மை கொடுத்து முதலிற் கூறினார். "ஊழிற்பெருவலி யாவுள மற்றொன்று, சூழினுந் தான்முந்துறும்" என்றபடி எவ்வாற்றாலுங் கடக்கவொண்ணாத உறுதியுடைமைபற்றி, 'வல்வினை' எனப்பட்டது. விளைவும், உம் - இறந்ததுதழுவிய எச்சமும், உயர்வுசிறப்பும். சிறிதும் என்பதனிறுதியில், இழிவுசிறப்பும்மை - தொகுத்தல் விகாரப்பட்டது. வெல்வதே, ஏ - பிரிநிலையோடு தேற்றம். (203) 144. | நினைக்கவுந்தொழவுமெட்டாநீயெழுந்தருளப்பெற்றுந் தனக்கிதுதகுதியென்றுதமருடன்வாழவெண்ணான் மனக்கடுங்கனலினான்றன்மனத்தினாலுரைத்தபுன்சொல் எனக்கிசையாமல்யானுமிருஞ்சிலையிறுத்ததென்றான். |
(இ -ள்.) '(யாவராலும்), நினைக்கவும் - (மனத்தினாற்) சிந்தித்துப் பார்த்தற்கும், தொழவும் - (மொழி மெய்களால்) வணங்குதற்கும், எட்டா - எட்டாத, நீ -, எழுந்தருள பெற்றும் - (தனது அரண்மனைக்குக் கருணையோடு] வந்துசேரப்பெற்றிருந்தும், இது தனக்கு தகுதி என்று - நீ அருளிச்செய்த சொல் தனக்குத் தக்கதென்று உட்கொண்டு, தமருடன் வாழ எண்ணான் - ஞாதிகளான பாண்டவர்களோடு ஒத்துவாழ்தற்கு நினையாதவனும்,மனம் கடும் கனலினான் - மனத்திற் கொடிய கோபாக்கினியையுடையவனுமாகிய துரியோதனன், தன் மனத்தினால் உரைத்த -தனது மனக்கருத்தோடு பொருந்தி (உன்னையும் என்னையும்) நிந்தித்துக்கூறின,புல் சொல் - இழிவான வார்த்தை, எனக்கு இசையாமல் - எனக்குப்பொருந்தாமையால், யானும் இருஞ் சிலை இறுத்தது - நானும் பெரியவில்லைமுறித்திட்டது,' என்றான் - என்று (கண்ணனை நோக்கி விதுரன்) கூறினான்; (எ- று.) |