பக்கம் எண் :

உலூகன் தூது சருக்கம் 21

     (இ -ள்.) அன்றியே - (இங்ஙனஞ் சூதாட்ட வழியில்) அல்லாமல்,
அழிவினை கருதாமல் - தோல்வியை (நேரக் கூடுமென்று) நினையாமல்,
வென்றியே நினைந்து - ஜயித்தலையே (நேருமென்று) நினைத்து, அவருடன்
மலைகுவம் என - அப்பாண்டவர்களோடு போர் செய்வோமென்று நிச்சயித்து,
எதிர்த்திரேல் - (அவர்களை) எதிர்ப்பீரானால், உங்களால் வெல்லுதல் அரிது -
உங்களால் (அவர்களைச்) சயித்தல் முடியாது; அடல் - வலிமையுடைய,
வீமனும் - பீமசேனனும், விசயனும் - அருச்சுனனும், கன்றியே -
கோபங்கொண்டு, களம் புகில் - போர்க்களத்தையடைந்த மாத்திரத்தில்,
அனைவீரும் - நீங்களெல்லீரும், பொன்றியே விடுகின்றினிர் - (யுத்தத்தில்)
நிச்சயமாக இறந்தே விடுவீர்கள்; முனிவர் சொல் பொய்க்குமோ பொய்யாதே -
முனிவரது வார்த்தை தவறுமோ? தவறவேமாட்டாது; (எ - று.)

     அம்மா- வியப்பிடைச்சொல்; பாண்டவர்களது பராக்கிரமங்களை
நோக்கிய அதிசயத்தால் வந்தது.  'உங்களெல்லோரையும் ஒழித்தற்கு வீமன்
விசயன் என்ற இருவரும் ஒருங்குவேண்டுவதில்லை, இருவருள் எவனாயினும்
ஒருவன் போதும்' என்ற கருத்து விளங்க, 'வீமவிசயர்' என உம்மைத்
தொகையாற் சேர்த்துக் கூறாமல் 'வீமனும் விசயனும்' எனத் தனித்தனி
பிரித்துக் கூறினார்.  'உங்களை அழித்தற்கு அவர்கள் போர்செய்யவேண்டா.
போர்க்களத்தில் வருதல்மாத்திரமே அமையும், அம்மாத்திரத்திலே நீங்கள்
அச்சத்தால் இறப்பீர்கள்' என்ற பொருளைத் தோற்றுவித்தற்கு, 'களம் புகில்'
என்றார்.  பொன்றிவிடுவீரென எதிர்காலத்தாற் கூறவேண்டிய விடத்து
'பொன்றிவிடுகின்றினிர்' என நிகழ்காலத்தாற் கூறினது நிச்சயமும்
விரைவும்பற்றி வந்த காலவழுவமைதி.  பொன்றுகின்றீர் என்னாது
பொன்றிவிடுகின்றினிர் எனக் கூறியதில் விடு என்பதும் அத்துணிவையே
உறுதிப்படுத்தும்.  பாண்டவரைவருள் வீம அருச்சுனரையே எடுத்துக் கூறினது,
இவ்விருவரும் துரியோதனாதியரையும் கர்ணனையும் கொல்வதாக முன்னர்ச்
சபதஞ்செய்திருத்தலாலும் பலபராக்கிரமங்களிற் சிறந்தவராதலாலும் என்க.
'முனிவர் சொற்பொய்க்குமோ பொய்யாதே' என்ற பொதுப்பொருளால்
முன்வாக்கியங்களில் வந்த சிறப்புப்பொருளை விளக்கியதனால், வேற்றுப்
பொருள்வைப்பணி:
  பொதுப்பொருளாற் சிறப்புப்பொருளையாவது
சிறப்புப்பொருளாற் பொதுப்பொருளையாவது சாதித்தல், இவ்வணியின்
இலக்கணமாம்.

    அருள்கொண்டு கூறினாலும் வெகுண்டுகூறினாலும் அவ்வப் பயன்களைத்
தவறாமல் தந்தேவிடுகின்ற பழுதுபடாத பொருள் நிரம்பின சொற்களையுடைய
நிறைமொழிமாந்தரான முனிவரது வார்த்தை பயன்தராது விடாதாதலின்,
'முனிவர்சொற் பொய்க்குமோ பொய்யாதே' என்றார்.  'பொய்க்குமோ;
பொய்யாதே' என்ற இரண்டனுள் யாதாயினும் ஒன்றே அமைவதாயிருக்க,
உடன்பாடு எதிர்மறை என்ற இரண்டு முகத்தாலுங் கூறினது, அது
தவறாமையை உறுதிப்படுத்தும் பொருட்டென்க; இதனை "வளம்பட
வேண்டாதார்யார் யாருமில்லை" "உண்டோ உணர்ச்சி மற்றில்லாகும்"
என்பனபோலக் கொள்க.  'முனிவர்சொல்' என்றது, கீழ் ஆரணியபருவத்தில்
துரு