158. | எரியமுதருந்தக்கானமெரித்தநாளகன்றுபோன அரவினையங்கர்கோமானாசுகமாகக்கொண்டான் வரிசிலைவிசயன்றன்மேன்மறுகணைதொடுக்காவண்ணம் ஒருவரம்வேண்டுகென்றானுற்றவர்க்குறுதிசூழ்வான். |
(இ -ள்.) எரி - அக்கினிதேவன், அமுது அருந்த - உணவாக உண்ணும்படி, கானம் - காண்டவவனத்தை, எரித்த நாள் - தகித்த காலத்தில், அகன்று போன - (அங்கிருந்து) நீங்கிச்சென்ற, அரவினை - (தக்ஷகுமாரனான அசுவசேனனென்னுஞ் சிறு) பாம்பை, அங்கர்கோமான் - அங்கநாட்டார்க்குத் தலைவனான கர்ணன், ஆசுகம் ஆக கொண்டான் - அஸ்திரமாகக் கொண்டுள்ளான்; (ஆதலால் அவன்), வரி சிலை விசயன்தன்மேல் - கட்டமைந்த வில்லையுடைய அருச்சுனன் மேலே, மறு கணை தொடுக்காவண்ணம் - அந்த அஸ்திரத்தை இரண்டாமுறை பிரயோகியாதபடி, ஒரு வரம் வேண்டுக - ஒருவரத்தை (நீ கர்ணனை)க் கேட்டுப் பெறுவாயாக, என்றான் - என்று (குந்திக்கு உபாயம்) கூறினான்: (யாவனெனில்),- உற்றவர்க்குஉறுதி சூழ்வான் - (தன்னைஅடைந் தவர்க்கு நன்மையையே ஆலோசிப்பவனாகிய கண்ணபிரான்; (எ - று.)
கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்தேறிட்டு விளையாடிக் கொண்டிருக்கையில், அக்கினிபகவான், மிகப்பசித்து அந்தணவடிவத்தோடு வந்து, இந்திரனது காவற்காடாய் யாவர்க்கும் அழிக்கவொண்ணாதபடி நிலவுலகத்தி லிருக்கின்ற காண்டவவனமென்னும் பூந்தோப்பை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்கு விருந்திடவேண்டுமென்று வேண்ட, கிருஷ்ணார்ச்சுனர்கள், அங்கே புக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர் முதலிய துஷ்டர்களை அழித்தருள வேண்டுமென்னும் நோக்கத்தால் 'நீ இதனைப்புசி' என்று இசைந்து அளிக்க, உடனே நெருப்புப்பற்றி எரித்ததென்பது கதை. ஆசுகம் - விரைவிற்செல்வதென்று பொருள்; அப்பொழுது அக்கினி பகவானால் அருச்சுனனுக்குக் காண்டீவமென்னும் வில்முதலியன கொடுக்கப்பட்டமையும், அக்கினி எரிப்பதற்கு அருச்சுனன் அப்பொழுது தனதுவில் வல்லமைகொண்டு மிக உதவிசெய்து நின்றமையும் தோன்ற 'வரிசிலைவிசயன்' என்றார். (218) 159.-இதுவும் மேற்கவியும் -ஒருதொடர்; அதுகேட்ட குந்தி வருந்திக் கூறுதல். மன்றலந்தெரியல்வெய்யோன்மதலையென்மைந்தனென்ப தன்றெனக்குரைத்தாயாயினவனுடனணுகவொட்டேன் சென்றுயிரொழிக்குமாறுசெருவினைவிளைத்துப்பின்னை யின்றெனக்குரைத்தாயையாவென்னினைந்தென்செய்தாயே. |
(இ -ள்.) மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை - பரிமளமுள்ள அழகிய பூமாலையையுடைய சூரியனது குமாரனாக வழங்கப்படுகிற கர்ணன், என் மைந்தன் என்பது - எனதுபுத்திரனென்கிற செய்தியை, அன்று எனக்கு உரைத்தாய் ஆயின் - முன்னமே எனக்குச் சொல்லியிருந்தாயானால், அவனுடன் அணுக ஒட்டேன் - அத் |