பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 221

     (இ -ள்.) நால் திசை - நான்கு திக்குக்களுக்கும் உட்பட்ட, உலகு
தன்னில் - உலகத்திலுள்ள, நால் மறை உணர்ந்தோர்தாமும் - நான்கு
வேதங்களையறிந்த அந்தணர்களெல்லோரும், போற்று இசை -
துதிமொழியைக்கூறப்பெற்ற, மாலை என்னும் - சந்தியென்கிற, பொற்பு உடை
அணங்கு -அழகையுடைய சிறந்த தெய்வப்பெண், வைக - வீற்றிருக்கும்படி,
மாற்றுஇசைவு இலாத செம் பொன் மண்டபந் தன்னில் - உரைமாற்றுக்
கூறுதற்குமுடியாத [மிகவும்மாற்றுயர்ந்த] சிவந்த பொன்னினாலாகியதொரு
மண்டபத்திலே, ஆதிமேல் திசை கடவுள் பழமையான மேற்குத்திக்குக்குத்
தலைவனான வருண தேவன், இட்ட - போகட்ட, வெயில் மணி பீடம் -
வெவ்விய ஒளியையுடைய இரத்தினமய ஆசனவட்டத்தை, போன்றான்-
(அப்பொழுது சூரியன்) ஒத்தான்; (எ - று.)

    உவமையணி.  சந்தியாகாலங்களில் அந்தணர் யாவரும்
வேதமந்திரங்களைச்சொல்லி நமஸ்காரம் முதலியன செய்து வைதிகச்சடங்கு
புரிதலால், 'நான்மறையுணர்ந்தோர் தாமும் போற்றிசை மாலை'என்றது.
ஸந்த்யா என்பது - வடமொழியிற் பெண்பாற்சொல்லாதலால், அதனை
'அணங்கு' என்றது மிகஏற்கும்.  மண்டபம் -அந்திச்செவ்வானத்துக்கும்,
அதிலிட்ட பலகாற் பீடம் - ஆயிரங்கதிரிரவிக்கும்உவமை, பொற்பு -
அழகுணர்த்தும் உரிச்சொல்.  இனி, இது - பொன் பு எனப்பகுதியும்
விகுதியுமாகப் பிரிந்து, பொன்னின் தன்மை யென்றும் பொருள்படும்.
இப்பாட்டில், 'ஆதி' என்பதற்கு - (தேவருள்) முதல்வனான சூரியனென்று
உரைத்து, அதனை 'போன்றான்' என்பதற்கு எழுவாயாக்குவாரு முளர். (224)

165.- இது -அவ்வந்திப்பொழுதில் இயல்பாகத் தாமரை
குவிதலையும், செவ்வல்லி மலர்தலையும் வருணிப்பது.

கொண்டமென்சிறைவண்டென்னுங்கொழுநருக்கிடங்கொடாமன்
முண்டகக்குலத்துமாதர்முகங்குவிந்தூடிநிற்பக்
கண்டெதிர்நின்றகாதற்கயிரவக்கணிகைமாதர்
வண்டுறைநின்றுதங்கள்வாய்மலர்ந்தழைக்கலுற்றார்.

     (இ -ள்.) மெல் சிறை வண்டு என்னும் - மென்மையான
இறகுகளையுடைய வண்டுகளாகிய, கொண்ட கொழுநருக்கு - (தம்மை
உரிமைப்பொருளாகப்) பெற்ற கணவருக்கு, இடம் கொடாமல் - (தம்பக்கல்
வந்துசேர -இணங்கி) இடம்தராமல், முண்டகம் குலத்து மாதர் -
தாமரைகளாகியகுடிப்பெண்கள், ஊடி - ஊடல்கொண்டு, முகம் குவிந்து,
நிற்ப - முகம்வாடிநிற்க,- கண்டு - (அச்செய்தியைப்) பார்த்து, (இதுவே
தமக்கு நல்லசமயமென்றுஅறிந்து), எதிர்நின்ற கயிரவம் காதல் கணிகை
மாதர் - எதிரில் நின்றசெவ்வல்லிகளாகிய ஆசைகாட்டும் வேசைமகளிர்,
வள் துறை நின்று -அழகிய இறங்குதுறைகளிலே நின்று, தங்கள் வாய்
மலர்ந்து அழைக்கல்உற்றார் - தங்கள் (பூவாகிய) வாயைத் திறந்து
(வண்டுகளாகியஅப்புருஷரை)அழைக்கத்தொடங்கினார்கள்;(எ-று.)