எதிர்தவழும்என இயைத்து மேகங்கள் நேரில்வந்து தவழப்பெற்ற என்றுங்கொள்ளலாம்; இவர்களை எரிகிறவீட்டில் நின்று வெளியில் ஓடிச் செல்லாதபடி பொருது அடித்துத் தள்ளவேண்டுமென்பான், 'மலைவது' என்றான். வல் விரைந்து - நள்ளிரவு கழிந்திடுதற்கு முன்னே; ஒருபொருட்பன்மொழி. வல் - விரைவுணர்த்து மிடைச்சொல். இதனால், கண்ணனொருவனைக் கொல்லவேண்டுமென்ற திருதராட்டிரனினும், விதுரன்மீதுள்ள கோபத்தாலும், இருவரும் ஒருமனையில் வசித்தலாலும், அவனையும் உடன் கொல்லவேண்டுமென்ற துச்சாதனனது மிக்ககொடுமை நன்கு விளங்கும். (236) 177.-கர்ணன்தற்புகழ்ச்சியாகக் கூறுதல். செங்கதிரெழுந்துசீறிற்செறியிருணிற்பதுண்டோ இங்கிவனிருந்தவில்லிலெரியிடவேண்டுமோதான் வெங்கணையொன்றினாலேவிளிந்திடவென்றுமீள்வேன் கங்குலினெழுமினென்றுகன்னனுங்கனன்று சொன்னான். |
(இ -ள்.) (அது கேட்டு), கன்னனும்-, 'செம்கதிர்எழுந்து சீறின் - சிவந்தகிரணங்களையுடைய சூரியன் உதித்து அழிக்கத்தொடங்கினால், செறி இருள்நிற்பது உண்டோ - நெருங்கின இருள் அழியாமல் நிற்பது (எங்கேனும்) உளதோ? [இல்லை யென்றபடி]; இங்கு இவன் இருந்த இல்லில் எரி இடவேண்டுமோ தான் - (இக்கண்ணனைக்கொல்வதற்காக) இவ்வூரில் இவன் வந்துதங்கி யிருக்கிற வீட்டில் நெருப்புப் பற்றவைக்க வேண்டுமோ? [வேண்டுவதில்லை]; வெம் கணை ஒன்றினாலே விளிந்திட வென்று மீள்வேன் - கொடிய ஒருபாணத்தாலே (நான் அவனை) இறக்கும்படி சயித்துத் திரும்புவேன்; கங்குலின் எழுமின் - இவ்விரவிலேயே (போர்க்குப்) புறப்படுங்கள்,' என்று-, கனன்று சொன்னான் - கோபித்துக் கூறினான்; கன்னன் எப்பொழுதும் தனது பல பராக்கிரமங்களை மிக்கனவாகத் தானே மதித்தவனாதலால், இங்ஙனங் கூறினான். செங்கதிர் என்பது வெண்கதிராகிய சந்திரனைப் பிரித்தலால், செம் - இனம் விலக்க வந்த அடைமொழி. முதலடியிற்சொன்ன உபமானம் - யான் போர்க்கு எழுந்து கோபித்துச்சென்றால் கண்ணன் இறவாதிருப்பானோ? என்ற உபமேயத்தை உணர்த்தலால், பிறிதுமொழிதலாம்: சூரியபுத்திரனான தனக்குச் சூரியனையும், கருநிறமுடைய கண்ணனுக்கு இருளையும் ஏற்குமாறு உவமை கூறினான். (237) 178.-இதுவும் அடுத்த கவியும்- சகுனி 'கண்ணனைப் படுகுழி பாய்ச்சிக் கொல்லவேண்டும்' என்றல். பதிப்பெயர்ந்தேகிநாளைப்பகைவரைக்கூடுமாயின் விதிப்பயனென்னநம்மைவெஞ்சமர்வெல்லவொட்டான் மதிப்பதென்வேறுகள்ளமாயனைமனையிற்கோலிச் சதிப்பதேகருமமென்றுசௌபலன்பின்னுஞ்சொல்வான். |
|