182. | பெரும்பிலவறையைவேயின்பிளப்பினானிரைத்துமூடி அரும்பெறன்மணிகளாலோராசனமதன்மேலாக்கிச் சுரும்பிமிர்மாலைதூக்கித்தொழிலுடைவிதானமேற்றி வரம்பிலாவென்றிவேலான்மாறிலாவண்ணஞ்செய்தான். |
(இ -ள்.) வரம்பு இலா வென்றி வேலான் - எல்லையில்லாத வெற்றியைத் தருகின்ற வேலாயுதத்தையுடைய துரியோதனன், (தன் வேலையாட்களைக்கொண்டு), பெரும் பிலம் அறையை - பெரிய பள்ளமான அந்நிலவறையை, வேயின் பிளப்பினால் நிரைத்து மூடி - மூங்கில்களின் பிளப்புக்களினால் மேலே வரிசையாய்ப் பரப்பிமூடி, அதன்மேல் - அம்மூடியதன் மேல், அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் ஆக்கி - அருமையான பெறுதலையுடைய இரத்தினங்களால் ஒரு பீடத்தைச் சித்தஞ்செய்து, சுரும்பு இமிர் மாலை தூக்கி தொழில் உடை விதானம் ஏற்றி- வண்டுகள் மொய்த்து ஒலிக்கப்பெற்ற பூமாலைகளைத் தொங்கவிடப்பெற்று(ப் பலவகை விசித்திர) வேலைப்பாட்டையுடைய மேற்கட்டியை (அவ்வாசனத்திற்குமேல்) உயரத்தில் அமைத்து, மாறு இலா வண்ணம் செய்தான் - வேறுபாடு தோன்றாதபடி (எல்லாவற்றையும்) அமைத்து வைத்தான்;(எ - று.)
'அரும்பெறல்மணி' என்றது - வடமொழிநடை; இதனை "அருங்கேடன்,""சென்றுசேர்கல்லாப்புள்ள புள்ளி, லென்றூழ்வியன் குளம்" என்பன போலக்கொள்க. இனி, பெறலருமணி என மாற்றி இயைத்து, பெறுதற்கு அருமையானமணியெனினு மமையும். பிளப்பு - பிளக்கப்பட்ட பொருளுக்குத்தொழிலாகுபெயர்; பு - விகுதி. தூக்கி - வினையெச்சம்; உடை என்னுங்குறிப்புப் பெயரெச்சத்தைக் கொண்டது. விதாநம் - வடசொல். மாறிலாவண்ணம் - (நிலவறையின் மேல் அமைத்துவைத்தது) தோன்றாதபடி. (242) 183.-இதுமுதல் மூன்று கவிகள்- சூரியோதய வருணனை. அடியவர்மனத்திலுள்ளவாரிருட்கங்குறீர்க்கும் நெடியவனிருக்கவென்றுநிலவறைவிரகிற்செய்த கடியவனியற்கையஞ்சிக்கங்குலுங்கடிதிற்போகப் படியவர்துயிலும்போகப்பரிதியுமுதயஞ்செய்தான். |
(இ -ள்.) 'அடியவர் மனத்தில் உள்ள - (தனது) தொண்டர்களது உள்ளத்திலுள்ள, ஆர் இருள் கங்குல் - (மற்றையோர்க்குப் போக்குதற்கு) அரிய (அஜ்ஞாந) அந்தகாரமாகிய இரவை, தீர்க்கும் - அழித்தருளுகிற, நெடியவன் - பெருமைக்குணமுடைய கண்ணபிரான், இருக்க - வீற்றிருக்க வேண்டும்,' என்று - என்று கருதி, விரகின் - வஞ்சனையாக, நிலம் அறை செய்த - நிலவறையைச் செய்துமுடித்த, கடியவன் - கொடுந்தன்மையுடைய துரியோதனனது, இயற்கை - துஷ்டசுபாவத்துக்கு, அஞ்சி - பயந்து, கங்குலும் - இராத்திரியும், கடிதின் போக - விரைவாகக்கழிய, பரிதியும் - சூரியனும், படியவர் துயிலும் போக - நிலவுலகத்திலுள்ளாரது நித்திரையும் ஒழியும்படி, உதயம் செய்தான் - உதித்தலைச்செய்தான்; (எ - று.) |