ஆழியங்கை, கையுந் திருவாழியுஞ் சேர்ந்த சேர்த்தியாலாகிய அழகு; கைக்குத் திருவாழி ஆபரணம்போல அழகுகொடுத்து நிற்பதென்க. தோன்றல் - யாவரினுஞ் சிறந்து விளங்குபவனுக்குத் தொழிலாகுபெயர்; இது - ஆண்பாற்சிறப்புப்பெயர். (247) 188.-துரியோதனன் சபையில்வீற்றிருத்தற் சிறப்பு. கந்தடுகளிற்றுவேந்தன்கண்ணிலாவரசுங்கங்கை மைந்தனுமுதலாவுள்ளமன்னருமதிவல்லோருந் தந்திரவகையுமேனையிளைஞருந்தன்னைச்சூழ விந்திரனிருக்கையன்னகோயிலூடினிதிருந்தான். |
(இ -ள்.) (அங்ஙனம் தூதரால் அழைக்கப்பட்டுக் கண்ணன் செல்லுகையில்), கந்து அடு களிறு வேந்தன் - கட்டுத்தறியை முறிக்கின்ற மதயானைச் சேனையையுடைய துரியோதனராசன்,- கண் இலா அரசும் - திருதராட்டிரனும், கங்கை மைந்தனும் - வீடுமனும், முதல் ஆ உள்ள - முதலாகவுள்ள, மன்னரும் - அரசர்களும், மதி வல்லோரும் - அறிவில்வல்ல அமைச்சர்களும், தந்திரம் வகையும் - சேனையின் பகுப்புக்களும், ஏனை இளைஞரும் - மற்றுந் தம்பிமார்களும், தன்னைச் சூழ - தன்னைச்சுற்றிலுமிருக்க, இந்திரன் இருக்கை அன்ன கோயிலூடு - தேவேந்திரனது இருப்பிடத்தை யொத்த தனது சபா மண்டபத்தின் மத்தியிலே,இனிது இரு - தான் - (கண்ணுக்கு) இனிமையாக வீற்றிருந்தான்; (எ - று.) இருக்கை - இருப்பிடத்துக்குத் தொழிலாகுபெயர்; கைந்தொழிற்பெயர்விகுதி. தந்த்ரம் - வடசொல். (248) 189.-கண்ணனைமாத்திரம்உள்ளேவிடுமாறு துரியோதனன் ஏவலாளருக்குக் கட்டளையிடுதல். நாமவேலரசரோடுநால்வகைச்சேனையோடு மாமுகில்வண்ணன்வந்தானென்றனர்வரவுகண்டோர் வீமலர்த்தொடையினானும்வேத்திரத்தவரைநோக்கித் தாமரைத்தடங்கண்மாயன்றன்னையேவிடுமினென்றான். |
(இ -ள்.) (அப்பொழுது), வரவு கண்டோர் - (கண்ணபிரானது) வருகையைப் பார்த்தவர்கள், 'நாம வேல் அரசரோடும் - (பகைவர்க்கு) அச்சத்தைத்தருகிற வேலாயுதத்தையுடைய பல அரசர்களுடனும், நால்வகை சேனையோடும் - சதுரங்க சைனியத்துடனும், மா முகில் வண்ணன் - கரியமேகம்போன்ற திருநிறமுடைய கண்ணன், வந்தான்-', என்றனர் - என்று (துரியோதனனுக்குக் கூறினார்கள்), (அதுகேட்டு), வீ மலர் தொடையினானும்- வண்டுகள் மொய்க்கப் பெற்ற பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையையுடைய துரியோதனனும், வேத்திரத்தவரை நோக்கி - (கையிற்) பிரம்பேந்தியுள்ள காவலாளரைப் பார்த்து, தாமரை தட கண் மாயன் தன்னையே விடுமின் என்றான் - 'தாமரைமலர்போன்ற பெரிய கண்களையுடைய |