194. | அற்புதபங்கயநற்பதமுந்தலினக்குழியின்புடையே, சற்பலந்தொறுமற்றுவிழுந்தனதத்த நெடுந்தலைபோய், முற்பவனன்பொரக்குவடுந்துணிபட்டுமுடங்கியபொன், வெற்பெனநின்றனர்வெற்றுடங்கொடுவிற்படைகொண்டவரே. |
(இ -ள்.) அ குழியின் புடையே - அப்பிலவறையின் உள்ளிடத்திலே, வில் படை கொண்டவர் - வில்லாகிய ஆயுதத்தை யேந்தி நின்ற வீரர்கள், அற்புத பங்கயம் நல் பதம் உந்தலின் - ஆச்சரியகரமான தாமரைமலர் போன்ற அழகிய (கண்ணனது) திருவடிகள் உதைத்தலால், தத்தம் நெடுந்தலை அற்று போய் சற்ப தலம் தோறும் விழுந்தன - தங்கள் தங்களது பெரியதலைகள் அறுபட்டுப் போய் நாகங்கள் வசிக்கிற இடமாகிய அப்பாதாளலோகம் முழுவதிலும் விழுந்திட்டனவாக,- வெறு உடலம் கொடு- (தலையில்லாத) [உயிரற்ற] வெற்றுடம்புகளை மாத்திரங்கொண்டு, முன்பவனன்பொர முக் குவடும் துணிபட்டு முடங்கிய பொன் வெற்பு என நின்றனர் - முன்னே வாயுதேவன் மோதுதலால் மூன்று சிகரங்கள் அறுபட்டு அழகொழிந்த மேருமலை போல நின்றார்கள்; (எ - று.) மூன்றாமடியிற் குறித்த வரலாறு:-முன்னொருகாலத்தில் வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார் பலசாலியென்று விவாத முண்டாக, அதனைப் பரீட்சித்தறியும் பொருட்டு, வாயுதேவன் மேருமலையின் சிகரத்தைப் பெயர்த்துத்தள்ளுவதென்றும் ஆதிசேஷன் அது பெயரவொட்டாமற் காத்துக் கொள்ளுவதென்றும் ஏற்பாடு உண்டாக்கி, அங்ஙனமே இருவரும் தேவர்முதலியோரது முன்னிலையில் தத்தம் வலிமையைக் காட்டத் தொடங்கிய பொழுது, ஆதிசேஷன் தனது ஆயிரம் படங்களாலும் மேருமலையின் ஆயிரஞ் சிகரங்களையும் கவித்துக்கொண்டு பெயரவொட்டாமல் வெகுநேரங்காக்க, பின்னர் வாயுதேவன் தன்வலிமையால் அம்மலைச்சிகரங்களில் மூன்றைப்பெயர்த்துக் கொண்டுபோய்த் தென் திசையில்தள்ளிவிட்டானென்பது.
பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், 'நற்பதம்' என்றார்; "வாலறிவனற்றாள்" என்றார் திருவள்ளுவனாரும். வெறுமை + உடல் = வெற்றுடல்; பண்புத் திரிபு.பெருவடிவத்துக்கு மலையும், அதன் தலைக்குச் சிகரமும், அதனைப் போக்கியஎம்பிரான் திருவடிக்கு வாயுதேவனும் உவமை. (254)
195. | மேல்வலியுற்றெதிர்வீசியெழிற்கருமேகநிறத்திருமால், கால்விசையிற்படமோதுதலிற்பொருகாமர்புயத்துணைபோய், நீலநிறக்கவின்வாசவன்வச்சிரநீள்படையிற்சிறகீர், மால்வரையொத்தனர்வாகை பெறக்கதிர்வாள்களெடுத்தவரே. |
(இ -ள்.) வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவர் - (கண்ணனைச் சிறைபிடித்து) வெற்றியைப் பெறும்பொருட்டு ஒளியையுடைய [அல்லது கூர் நுனியுள்ள] வாளாயுதங்களை யேந்திநின்ற வீரர்கள், - எழில் கருமேகம் நிறம் திருமால் - அழகிய காளமேகம் |